Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாஞ்சோலை அடர்வனப்பகுதியில் விடப்பட்ட 12 பேரை கொன்ற ‘ஆட்கொல்லி யானை’ ராதாகிருஷ்ணன் மாயம்?

* காலர் ஐடி சிக்னல் கிடைக்காததால் வனத்துறையினர் தவிப்பு

* மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம்

அம்பை : அம்பை அருகே மாஞ்சோலை அடர் வனப்பகுதியில் விடப்பட்ட ஆட்கொல்லி யானை ராதாகிருஷ்ணன் நடமாட்டம் குறித்து காலர் ஐடி சிக்னல் கிடைக்காததால் வனத்துறையினர் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக ராதாகிருஷ்ணன் என்ற யானை அட்டகாசம் செய்து வந்தது. இவை தனியார் தேயிலை, காபி, ஏலக்காய் தோட்டங்கள் மற்றும் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியதோடு, சிலரை காவு வாங்கியுள்ளது. இந்த யானையால் அப்பகுதியில் இதுவரை 12 பேரை பலி வாங்கியது.

இதையடுத்து ஆட்கொல்லி யானை ராதாகிருஷ்ணனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த செப்.22ம் தேதி கடலூர் அருகே எல்லமலை குறும்பர் மேடு பகுதியில் கண்டுபிடித்து மயக்க மருந்து நிரப்பப்பட்ட துப்பாக்கி மூலம் ஊசி செலுத்தி யானையை வனத்துறையினர் பிடித்தனர்.

இதைத்தொடர்ந்து ராதாகிருஷ்ணன் யானையை மாஞ்சோலை அடர்வனப்பகுதியில் விடுவதற்கு வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 25ம் தேதி ஆட்கொல்லி யானை ராதாகிருஷ்ணன் நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மாஞ்சோலை அடர் வனப்பகுதியில் கொண்டு வந்து விடப்பட்டது. அகத்தியமலை யானைகள் சரணாலயத்தில் ஜிபிஎஸ் கருவியுடன் காலர் ஐடி பொருத்தப்பட்ட ராதாகிருஷ்ணனை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை யானையின் காலர் ஐடியில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் யானை எங்கு சென்றது எனத் தெரியாமல் வனத்துறையினர் தீவிரமாகத் தேடி வருவதாக கூறப்படுகிறது. இதனால் கோதையாறு, மாஞ்சோலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி, மணிமுத்தாறு மலையடிவாரத்தில் வசிக்கும் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆனால், மாஞ்சோவை அடர் வனப்பகுதியில் விடப்பட்ட காட்டு யானை ராதாகிருஷ்ணன் நடமாட்டம் குறித்து இரண்டு விதமான முறைகளில் தொடர் கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதலாவதாக, ஆன்டனாவுடன் கூடிய வனத்துறைக் குழு ஒன்று, யானையை 100 மீட்டர் முதல் 500 மீட்டர் வரையிலான தொலைவில் பின்தொடர்ந்து வந்து கண்காணித்து வருகிறது. இரண்டாவதாக செயற்கைக்கோள் மற்றும் காலர் ஐடி மூலமாக யானையின் நடமாட்டம் சமவெளிப் பகுதியில் உள்ள கம்ப்யூட்டர்களிலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிமிடம் வரை யானை எங்கு செல்கிறது என்பது குறித்த தகவல்கள் வனத்துறைக்கு தொடர்ந்து கிடைத்து வருகிறது.

சிக்னல் கிடைக்கவில்லை என்ற தகவல் உண்மையில்லை எனறு வனத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே கம்பத்தில் பிடிக்கப்பட்ட அரிகொம்பன் என்ற யானையும், நீலகிரி பந்தலூரில் பிடிக்கப்பட்ட புல்லட் ராஜா என்ற யானையும் மாஞ்சோலை அடர் வனப்பகுதியில் விடப்பட்டது. தற்போது மூன்றாவதாக நேற்று மாஞ்சோலை வனப்பகுதியில் ராதாகிருஷ்ணன் என்ற ஆட்கொல்லி யானையும் விடப்பட்டுள்ளது.

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிகொம்பன், புல்லட் ராஜா, ராதாகிருஷ்ணன் என்ற ஆட்கொல்லி யானை ஆகிய 3 யானைகளை அம்பாசமுத்திரம் வனப்பகுதியில் ரகசியமாக கொண்டு வந்து விடப்பட்டது. ஆனால் இது தொடர்பாக வனத்துறை சார்பில் எவ்வித தகவல்களும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. எனவே யானைகளின் நடமாட்டம் குறித்த தகவல்களை அவ்வப்போது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.