Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி வெலிங்டன் புதிய தலைவராக மணீஷ் எரி பொறுப்பேற்பு

சென்னை: நீலகிரி வெலிங்டனில் செயல்பட்டு வரும் பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியின் புதிய தலைவராக மணீஷ் எரி பதவியேற்றுக்கொண்டார். பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி 1905ம் ஆண்டு குவெட்டாவில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) நிறுவப்பட்டது. பின்னர் அது 1947ல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டனுக்கு மாற்றப்பட்டது. இது இந்தியாவின் முப்படை அதிகாரிகளுக்கான முன்னணி பயிற்சி நிலையமாகும். தற்போது இதன் புதிய தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் மணீஷ் எரி பதவி ஏற்றுக்கொண்டார்.

இதுவரை இப்பொறுப்பில் இருந்த லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் பணிக்காலத்தை நிறைவு செய்தார். லெப்டினன்ட் ஜெனரல் எரி, கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியின் முன்னாள் மாணவர். டிசம்பர் 1988ல் இந்திய ராணுவத்தின் 9 ஜம்மு-காஷ்மீர் இலகு காலாட்படையில் அவர் அதிகாரியாக இணைந்தார். மேலும், அவர் தற்போது தலைமை வகிக்கும் வெலிங்கடன் பாதுகாப்பு அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரியின் முன்னாள் மாணவரும் ஆவார்.

அதிக பதக்கங்களை பெற்ற மூத்த ராணுவ அதிகாரியான ஜெனரல் எரி, இந்திய ராணுவத்தில் 37 ஆண்டுகால அனுபவம் வாய்ந்தவர். கிழக்கு லடாக்கில் உள்ள சுஷுலில் அதி உயர பகுதிகள், வடக்கு பிராந்தியத்தில் பனிச்சிகரங்களைக்கொண்ட பகுதிகள் போன்றவற்றில் அவர் தனது பட்டாலியன்களுக்கு தலைமை வகித்துள்ளார். மேலும், நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில், ராணுவ காலாட்படையின் மலைப்பிரிவில் ஒரு புதிய பட்டாலியனை உருவாக்கி அதனை வழிநடத்தினார். பின்னர் கிழக்கு பிராந்தியத்தில் கஜ்ராஜ் படை வகுப்புக்கு தலைமை வகித்தார்.

ஜெனரல் எரி, தேசிய பாதுகாப்புப் படையின் தலைமையகத்தில் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (செயல்பாடுகள்), ராணுவ தென்மேற்கு ஆணையகத்தின் (காமாண்டின்) தலைமை நிர்வாக அதிகாரி, பாதுகாப்பு அமைச்சக தலைமையகத்தில் ராணுவப்பிரிவின் வியூக திட்டமிடலுக்கான தலைமை இயக்குநர் ஆகிய நிலைகளிலும் பணியாற்றியுள்ளார். லெப்டினன்ட் ஜெனரல் எரி, பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரிக்கு தொடர்ந்து நல்லாதரவு மற்றும் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் சிவில் ஊழியர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு நன்றி தெரிவித்தார். பாதுகாப்புக்கல்வி, கூட்டாக செயல்படுதல் போன்றவற்றில் முப்படை அதிகாரிகளுக்கும் மிகச்சிறந்த பயிற்சிக்கல்லூரியாக இதனை இயக்குவதற்கு அவர் உறுதியேற்றுக்கொண்டுள்ளார்.