மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: குகி தலைவரின் வீடு தீ வைத்து எரிப்பு; பிரதமர் மோடி சென்ற அடுத்த நாளே சம்பவம்
சூரசந்த்பூர்: மணிப்பூருக்கு பிரதமர் மோடி சென்று வந்த ஒருநாளுக்கு பிறகு குகி அமைப்பின் தலைவரின் வீடு மர்ம கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே ஏற்பட மோதல் இனக்கலவரமாக வெடித்து கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக பதற்றம் நீடித்து வருகிறது. கடந்த 4ம் தேதி குகி தேசிய அமைப்பு மற்றும் குகி-ஸோ கவுன்சில் ஆகிய 2 அமைப்புகள் ஒன்றிய அரசுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இதில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பயணிகளின் இயக்கத்திற்கு தேசிய நெடுஞ்சாலை-2ஐ மீண்டும் திறக்க ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் இது அமைதி முயற்சியில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும் என ஒன்றிய அரசு நம்பிக்கை தெரிவித்திருந்தது. இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, பிரதமர் மோடி 2 ஆண்டில் முதல்முறையாக கடந்த 13ம் தேதி மணிப்பூரின் சூரசந்த்பூர் மற்றும் இம்பாலுக்கு சென்று வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், பிரதமர் மோடி சென்று வந்த அடுத்த நாளே, கடந்த 14ம் தேதி சூரசந்த்பூரில் உள்ள குகி தேசிய அமைப்பின் தலைவர் கால்வின் அய்கெந்தாங்கின் வீடு மர்ம நபர்களால் தீ வைத்து தீக்கிரையாக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதே போல, குகி ஸோ கவுன்சில் மற்றும் பழங்குடியின தலைவர்கள் அமைப்பின் செய்தித் தொடர்பாளராக இருக்கும் மற்றொரு குகி தலைவரான கின்சா வுல்சோங்கியின் வீடும் மர்ம நபர்களால் குறிவைக்கப்பட்டதாகவும், சரியான நேரத்தில் உள்ளூர் மக்கள் திரண்டதால் மர்ம நபர்கள் ஓடிவிட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், மின்கசிவு காரணமாக கால்வின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் மக்களில் சிலர் கூறுகின்றனர்.
* தேசிய நெடுஞ்சாலை-2ஐ திறக்க சம்மதிக்கவில்லை
தேசிய நெடுஞ்சாலை-2 திறக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்த நிலையில், இத்தகவலை குகி-ஸோ கவுன்சில் நேற்று மறுத்துள்ளது. அதன் அறிக்கையில், ‘தேசிய நெடுஞ்சாலை-2ஐ மீண்டும் திறப்பதாக அறிவிக்கவில்லை. இப்பாதையில் எந்த சுதந்திரமான போக்குவரத்தும் அனுமதிக்கப்படவில்லை. இப்பாதையில் பயணிப்பவர்கள் பாதுகாப்பை உறுதிபடுத்த பாதுகாப்பு படையினருக்கு ஒத்துழைப்பு அளிப்போம் என்று மட்டுமே நாங்கள் கூறி உள்ளோம். இந்த விஷயத்தில் ஒன்றிய அரசின் அறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மெய்தி, குகி-சோ சமூகங்களுக்கு இடையேயான மோதலுக்கு இன்னும் தீர்வு ஏற்படாததால் இரு தரப்பிலிருந்தும் யாரும் எந்த சூழ்நிலையிலும் எதிரெதிர் பகுதிக்குள் நுழையக் கூடாது. குகி-ஸோ பகுதிகள் மதிக்கப்பட்ட வேண்டும். எந்தவொரு மீறலும் கடுமையான விளைவுகளுக்கும், அமைதி, பாதுகாப்பை மேலும் மோசமடையவும் செய்யும்’ என எச்சரிக்கப்பட்டுள்ளது.