Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வரவேற்பு அலங்கார வளைவுகள் அடித்து நொறுக்கப்பட்டன; மணிப்பூரில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு: போலீசாருக்கும், கும்பலுக்கும் இடையே மோதல்

சுராசந்த்பூர்: பிரதமர் மோடியின் மணிப்பூர் வருகையை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள் அடித்து நொறுக்கப்பட்டதால், மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் சில அமைப்புகள் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் தொடங்கிய மெய்தி மற்றும் குக்கி-சோ இனக்குழுக்களுக்கு இடையேயான வன்முறையில் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, 50,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்கு மாநில அரசு கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், வன்முறைக்குப் பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி நாளை (செப். 13) மணிப்பூர் செல்கிறார்.

அதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மெய்தி இன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இம்பால் பள்ளத்தாக்கு மற்றும் குக்கி இன மக்கள் வசிக்கும் சுராசந்த்பூர் ஆகிய இரு பகுதிகளுக்கும் அவர் செல்லவிருப்பதால், இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த பயணத்தின்போது, சுமார் ₹8,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களையும் அவர் அறிவிக்க உள்ளார். பிரதமரின் வருகைக்கு குக்கி-சோ அமைப்புகள் வரவேற்பு தெரிவித்தாலும், மோடியின் சில நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எதிர்க்கட்சிகளும் பிரதமர் மோடியின் பயண நேரம் மற்றும் கால அளவைக் குறித்து விமர்சித்துள்ளன. இந்நிலையில், சுராசந்த்பூர் மாவட்டத்தில் நேற்றிரவு பிரதமரை வரவேற்பதற்காக அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள், கொடிகள் மற்றும் விளம்பரப் பதாகைகளை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கி, தீ வைத்தனர். பிரதமர் ஹெலிகாப்டரில் வந்திறங்கும் பி.எஸ்.எஃப். ஹெலிபேட் அருகே உள்ள பியாசன்முன் கிராமம் மற்றும் போங்மோல் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த வன்முறைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வன்முறையில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தடுத்தபோது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரவு 9.10 மணியளவில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், இந்த மோதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சுராசந்த்பூர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும், அப்பகுதி ‘ட்ரோன்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட மண்டலமாக’ அறிவிக்கப்பட்டுள்ளது. மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆறு தீவிரவாத அமைப்புகளின் கூட்டமைப்பான ஒருங்கிணைப்புக் குழு, நாளை மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கிடையே, கட்சியின் அடிமட்டத் தலைமையை தேசிய தலைமை மதிக்கவில்லை எனக் கூறி, பாஜகவின் உள்ளூர் நிர்வாகிகள் 13 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு ஒருபுறம் வலுத்து வந்தாலும், மற்றொருபுறம், இந்தியா-மியான்மர் எல்லை வேலிக்கு எதிராக நாகா மக்கள் நடத்திய காலவரையற்ற தேசிய நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை, ஐக்கிய நாகா கவுன்சில் வாபஸ் பெற்றுள்ளது. அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வருகையை முன்னிட்டு, இம்பாலில் உள்ள காங்க்லா கோட்டை மற்றும் சுராசந்த்பூரில் உள்ள அமைதி மைதானத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ராணுவத்தின் ஸ்பியர் கார்ப்ஸ் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அபிஜித் எஸ்.பெந்தர்கர், முக்கிய பாதுகாப்புப் பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆளுநர் அஜய் குமார் பல்லா, குக்கி-சோ மற்றும் மெய்தி சட்டமன்ற உறுப்பினர்களைத் தனித்தனியே சந்தித்துப் பேசினார். பாஜகவின் வடகிழக்கு பொறுப்பாளர் சம்பித் பத்ரா உள்ளிட்ட தலைவர்கள் இம்பாலில் முகாமிட்டு, கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, போக்குவரத்து கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.