Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மணிப்பூர் போன்றா இங்கு ஆட்சி நடந்து வருகிறது? நாட்டில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடுதான்: தனிப்பட்ட கொலைகளை திசை திருப்புவதாக சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

நாகர்கோவில்: தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. தனிப்பட்ட பிரச்னைகளில் நடந்த கொலை சம்பவங்களை பெரிதாக்கி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நினைக்கிறார்கள் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

நாகர்கோவிலில் நேற்று காலை சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு அரசின் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் சொல்ல முடியாததால் ஆங்காங்கே சில தனிப்பட்ட விரோதங்களில் ஏற்படுகின்ற சில கொலை குற்றங்களை இந்த அரசுக்கு எதிராக சட்டம் ஒழுங்கு பிரச்னை என்று கூறுகிறார்கள். அவ்வாறு எங்கும் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படவில்லை. இந்தியாவில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு தான்.

அதனால் தான் வெளிநாடுகளில் இருந்து வருகின்ற அந்நிய முதலீடு மிக அதிகமாக தமிழகத்திற்கு வருகிறது. மணிப்பூர் போன்றா இங்கு ஆட்சி நடந்து வருகிறது? சட்டம் ஒழுங்கை சிறப்பாக நடத்துகின்ற காரணத்தினால் தான் உலக அளவில் நடைபெறுகின்ற செஸ் போட்டியை தமிழகத்தில் நடத்தினார்கள். இந்தியாவிலேயே அனைத்து மத வழிபாடுகளுக்கும் பாதுகாப்பு கொடுக்கின்ற மாநிலம் தமிழகம் ஆகும். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் கோர்ட் கொள்கை முடிவெடுக்க முடியாது. அரசு தான் கொள்கை முடிவு எடுக்கும். குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப ரூ.10 லட்சம் அல்லது ரூ.20 லட்சம் வரை கொடுக்கலாம். இது முதல்வரின் முடிவுக்கு உட்பட்டது. அதில் குறை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

* ‘வெளியில் மைக்கில் பேசுவதற்கு பதில் சட்டமன்றத்தில் அதிமுகவினர் பேசணும்’

சபாநாயகர் அப்பாவு கூறுகையில், ‘சட்டமன்றம் தொடங்கியதும் விதிமுறையை மீறி அவையை ஒத்தி வைத்து விட்டு, தங்களை மட்டும் பேச அனுமதிக்க வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்து விடுகிறார்கள். வெளியில் உள்ள மைக்கை பார்த்து (பத்திரிகையாளர்களிடம்) பேசும் அதிமுகவினர் சட்டமன்றத்தில் இருக்கிற மைக்கில் பேச மறுக்கிறார்கள். வருங்காலத்தில் அவர்கள் சட்டமன்றத்திற்கு வந்து முழுமையாக பேச வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம்’ என்றார்.