Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மணிப்பூர், கும்பமேளாவுக்கு பாஜ குழு அனுப்பாதது ஏன்? ஹேமமாலினி கமிட்டி அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டனர்: செல்வப்பெருந்தகை பாய்ச்சல்

ஊட்டி: கரூர் சம்பவத்தில் ஹேமமாலினி கமிட்டி அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டனர் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். வாக்கு திருட்டை கண்டித்து ஊட்டியில் கையெழுத்து இயக்கத்தை காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று தொடங்கி வைத்து அளித்த பேட்டி: ராகுல்காந்தி தலைமையில் கரூர் மாவட்டத்திற்கு குழு அனுப்ப திருமாவளவன் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. ஆனால், பாஜ மக்கள் மத்தியில் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு குழு அமைத்துள்ளனர். தமிழக அரசு ஒரு ஆணையத்தை நியமித்துள்ளது. அந்த ஆணையம் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் முறையாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் முடிவு வரட்டும்.

பாஜ சார்பில் அமைக்கப்பட்ட குழு உண்மையை கண்டறியும் வகையில் இருக்க வேண்டும். அரசியல் செய்யக் கூடாது. ஹேமமாலினி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டி அரசியல் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள கமிட்டி அவர்கள் வந்தவுடன் அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஹேமமாலினி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உண்மை கண்டறியும் குழு ஏன், கும்பமேளாவில் நடந்த விபத்தின் போது அமைக்கப்படவில்லை. மேலும், மணிப்பூர் மாநிலத்தில் எத்தனை படுகொலைகள் மற்றும் வன்கொடுமைகள் நடந்தது. அப்போது, அங்கு இந்த உண்மை கண்டறியும் குழு அமைத்து அனுப்பியிருக்க வேண்டும் தானே.

அதை விட்டுவிட்டு, இது போன்று பிணத்தை வைத்து சில கட்சி தலைவர் அரசியல் செய்வது, அரசியல் பிழை. தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் கிழக்கு எது, மேற்கு எது என்று தெரியாத ஹேமமாலினி, அனுராக் தாக்கூர் ஆகியோர் திமுக மீது குற்றம் சாட்டுகின்றனர். போலீஸ் மீது குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் சிறந்த முறையில் செயல்பட்டுள்ளனர். அதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளன. காவல்துறையினர் தியாக மனப்பான்மையுடன் செயல்பட்டனர். அமைச்சர்களை அனுப்பி வைத்து விட்டு, முதல்வர் வீட்டோடு இருந்திருக்கலாமே. ஆனால், அப்படி செய்யாமல் சம்பவம் நடந்தவுடன் துரிதமாக செயல்பட்டார். முதல்வரை பாராட்ட மனது இல்லையென்றால் அமைதியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.