உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே, கோயிலில் மாணிக்கவாசகர் சிலையை திருடி விற்க முயன்ற 2 பேரை, போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, செல்லம்பட்டி பகுதியில் சிலை கடத்தல் நடப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீசார் செல்லம்பட்டி பகுதியில் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர், உசிலம்பட்டியை சேர்ந்த காசிமாயன் (43) என்பதும், டூவீலரில் அவர் கொண்டு வந்த சாக்குப்பையை பிரித்து பார்த்தபோது, ஒரு அடி உயரம், 3 கிலோ எடையுள்ள மாணிக்கவாசகர் உலோக சிலை இருந்ததும் தெரிய வந்தது. மேலும், விசாரணையில், காசிமாயன், தனது கூட்டாளிகளான அதே பகுதியை சேர்ந்த சோலை, வேல்முருகன், மதன் ஆகியோருடன் சேர்ந்து, உசிலம்பட்டி அருகே ஆனையூர் மீனாட்சி கோயிலில் மாணிக்கவாசகர் சிலையை திருடியதாக ஒப்புக்கொண்டார்.
மேலும், பாப்பாபட்டியை சேர்ந்த தவசி (65) என்பவருடன் சேர்ந்து சிலையை விற்க முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து சிலையை பறிமுதல் செய்த போலீசார் காசிமாயன், தவசி ஆகியோரை கைது செய்தனர். சிலை திருட்டு தொடர்பாக சோலை, வேல்முருகன், மதன் மற்றும் சிலையை வாங்க வந்த கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.