Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாங்கா யாருக்கு என்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சேலத்துக்கனி யாருக்கு என்ற விவகாரத்தில் ஆணையத்துக்கே குழப்பம் வந்துட்டாமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘சேலத்துக்கனி கட்சியில் தந்தை, மகன் மோதலால் கொடி, சின்னத்துக்கான உரிமை யாருக்கு என்ற கேள்வி எழுந்திருக்கு.. ஆணையத்துக்கு தவறான தகவல்களை மகன் தரப்பு கொடுத்து அங்கீகாரத்தை பெற்று விட்டதாக தந்தை தரப்பு கொந்தளித்ததாம்.. அத்தோடு இதை ரத்து செய்ய வேண்டுமென டெல்லிக்கு ஒரு குழுவையே அனுப்பி ஆணையத்திடம் முறையிட்டுள்ளதாம்..

இவ்வாறு இரு தரப்பும் மாறி மாறி கடிதங்களை கொடுத்துள்ளதால் பாமக யாருக்கு என்ற குழப்பம் ஆணையத்துக்கு எழுந்துள்ளதாம்.. கட்சி விதிகளின்படி பார்த்தால் மகனுக்கு சாதகமாக முடிவு வருவதால் தந்தை தரப்பு விவாதத்தை தீவிரமாக ஆராய்ந்து வருகிறதாம் ஆணையம்.. அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியை நிர்வாகம் செய்ய ஆணையத்துக்கு அதிகாரம் கிடையாது என்ற தந்தை தரப்பு வேறுவழியின்றி அவர்களையே நாடும் நிலைக்கு வந்துள்ளதாம்..

எல்லா ஆவணங்களையும் முறைப்படி ஆணையத்திடம் தெரிவித்து விட்டதால், விரைவில் நீதி கிடைக்கும் என காத்திருக்கிறதாம் தந்தை தரப்பு. இதற்கிடையே, தந்தை மகன் ஆதரவாளர்கள் ஒருவர் மீது ஒருவர் சொல்லும் குற்றச்சாட்டுகள் வேகம் அடைந்துள்ளது. மகன் ஒன்றிய மந்திரியாக இருந்தபோது, இந்தூர் மருத்துவக் கல்லூரிக்கு நீதிமன்ற உத்தரவை மீறி முறைகேடாக அனுமதி வழங்கியதாக சிபிஐ வழக்கு போட்டிருக்கு..

இதில் 13 ஆண்டுகளாக ஜாமீனில் இருப்பதாகவும், குற்றப்பத்திரிகையில் முதல் நபராக இருப்பதாகவும், ஒரு முறை விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததற்காக அபராதம் செலுத்தியதாகவும் தந்தை தரப்பினர் சொல்லிக்கிட்டிருக்காங்க.. அதோடு ஒன்றிய பாஜ அரசு கண் அசைத்தால் அந்த ஜாமீன் எந்த நேரத்திலும் ரத்தாகும் எனவும் உடனடியாக அவர் திகார் ஜெயிலுக்கு போவார் எனவும் அடுக்கிக்கிட்டே போறாங்க..

அதிலும் மகனின் டால்பின் பங்களா மட்டும் ரூ.125 கோடி எனவும், நம் சமுதாயத்தின் ரத்தமும் வியர்வையும், தியாகத்தை பணமாக்கி திழைத்தது யாரு என்றும் மகன் தரப்பிடம் கேள்விகேட்டுக்கிட்டே இருக்காங்களாம்.. இதற்கான எதிர்ப்பையும் மகன் தரப்பினர் சொல்லிக்கிட்டிருக்காங்க.. மகன் இருக்க கட்சியின் பொறுப்புகளை யாரிடமோ கொடுத்தால் என்ன தான் செய்வதாம் என கேள்வி கேட்கும் மகன் தரப்பினர், கண் முன்னாடியே கட்சியை நாசமாக்கிக்கிட்டு இருக்கீங்களேன்னு வருத்தத்தையும் பதிவு செஞ்சிக்கிட்டு இருக்காங்க...

இப்படியாக சொந்த கட்சியினரே ஊழல் குற்றச்சாட்டை சொல்லி வருவது கட்சிக்காரர்களிடையே புதிய பரபரப்பை ஏற்படுத்திக்கிட்டிருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலை கட்சியில் போர்க்கொடி தூக்கிய கோபிக்காரரை சந்திக்க மறுக்கிறாராமே தேனிக்காரர் ஆதரவாளரான மாஜி எம்எல்ஏ ஒருத்தர்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில் தற்போது கோபிக்காரர் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருப்பதால் தேனிக்காரர் உத்தரவின் பேரில் அவரது ஆதரவாளர்களான அந்தந்த மாவட்ட செயலாளர்கள், அவரது ஆதரவாளர்களுடன் கோபிக்காரரர் ஊருக்கு நேரில் சென்று தனித்தனியாக சந்தித்து வருகின்றார்களாம்..

இதேபோல் டெல்டாவில் மலைக்கோட்டை, கங்கைகொண்ட சோழபுரம், நெற்களஞ்சியம் மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் அவர்களது ஆதரவாளர்களுடன் கோபிக்காரரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வந்தார்களாம்.. இதேபோல் மன்னர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலாளர்களுக்கும் ஓபிஎஸ் உத்தரவு போட்டு இருந்தாராம்.. இதனையடுத்து மாஜி நகர் மன்ற தலைவர் ஆதரவாளர்களுடன் நேரில் சென்று கோபிக்காரை சந்தித்து வந்துள்ளார். ஆனால்... மாஜி எம்எல்ஏ இதுவரையிலும் கோபிக்காரரை நேரில் சென்று பார்க்கவில்லையாம்...

கோபிக்காரரை பார்க்க விருப்பம் இல்லை என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் சொல்லிக்கிட்டு வர்றாராம்..’’.. என்றார் விக்கியானந்தா. ‘‘மாஜி உதயமானவரின் வீடியோ ஸ்டேட்மெண்டால் குழப்பத்தில் தவிக்கிறாங்களாமே இலைக்கட்சி நிர்வாகிகள்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியில் கடந்த சில மாதங்களாக வீடியோ பதிவில் வந்து, தூங்கா நகர உதயமான மாஜி அமைச்சர் ஒருவர் ஸ்டேட்மெண்ட் விட்டு வர்றார்..

இது அக்கட்சிக்கே புதிதான விஷயம். மற்ற மாஜிக்கள் எல்லாம் கட்சியில் நடந்து வரும் களேபரங்களை கண்டும்காணாமல் இருக்கும்போது, இவர் மட்டும் விடாமல் வீடியோ அறிக்கை பாலிசியை பின்பற்றுகிறார்.. அதேநேரம் தூங்கா நகரின் மற்றொரு மாஜியானவர், சமீபகாலமாக செய்தியாளர்களை கண்டாலே, ‘அரசியல் வேண்டாம்.. ப்ளீஸ்’ என ஒதுங்கி ஓடுகிறார்.. இவர் இப்படி ஒதுங்கும்போது, உதயம் மட்டும் ஏன் தொடர்ந்து வீடியோவில் பேசி வெளியிட வேண்டுமென இலைக்கட்சியிலே குழப்பம் நிலவுகிறதாம்..

கட்சியில் ஆக்கப்பூர்வமாக சிலர் கருத்துகளை முன் வைக்கும்போது, அவர்களை உதயம் கடுமையாக விமர்சித்து பேசுகிறார்; சேலத்துக்காரரை தாய், தெய்வம், அடுத்த புரட்சித்தலைவர் என்கிற பாணியில் ஏத்தி வேற விடுகிறாராம்.. கோட்டையானவரை சமீபத்தில் இவர் விமர்சித்துப் பேசியது, சக நிர்வாகிகளையே அதிருப்தியாக்கி இருக்கிறதாம்.. இதனால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதாக கட்சியின் சில ஸ்லீப்பர் செல் மாஜிக்கள் கூறி வருகின்றனர்..

ஏன் கட்சியை புதைகுழியில் தள்ளுவது போல, நம்ம ஆட்களையே விமர்சித்து பேசி பிரச்னையை பெரிதாக்கி வருகிறார். இவர் கட்சிக்கு ஆதரவா, விசுவாசமாக இருக்காரா.. இல்லை... கட்சியை மடை மாற்றும் வேலை செய்கிறாரா என தெரியாமல் இவரது ஆதரவாளர்கள், இலைக்கட்சியினர் பேசி வருகின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா.