மண்டபம்: பாக் ஜலசந்தி பகுதியில், ஆழ்கடலில் சூறைக்காற்றின் வேகம் குறைந்ததை அடுத்து, மண்டபம் பகுதியிலிருந்து இன்று காலை 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டு சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு கடலோரப் பகுதியில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் வாரத்தில் சுழற்சி முறையில் 3 நாட்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் பாக் ஜலசந்தி ஆழ்கடல் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பலத்த சூறாவளி காற்று வீசத் தொடங்கியது. இது காற்றழுத்தமாகவோ, புயலாகவோ மாற வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்தது. அதன் பேரில் பாதுகாப்பு கருதி இந்த பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டது. இதனால் மண்டபம் மீனவர்கள், ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை தடை விதித்தனர். அதன்பேரில் மீனவர்கள் படகுகளை கடலில் பாதுகாப்பாக நிறுத்தி கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு காற்றின் வேகம் தணிந்ததை அடுத்து, இன்று காலை 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர். மீன் வளத்துறை அதிகாரிகளிடம் அனுமதி சீட்டு பெற்று மீன்பிடி சாதனங்களை சேகரித்துக் கொண்டு 2 நாட்களுக்குப் பின் இன்று கடலுக்கு சென்றனர்.