Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மண்டபம் கடலோர பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் சுக்கு பறிமுதல்

மண்டபம்: மண்டபம் அருகே கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு டன் சுக்கு மூட்டைகளை போலீசார் நேற்று இரவு அதிரடியாக பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா, பீடி இலை மற்றும் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதை தடுக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மண்டபம் அருகே வேதாளை தென்கடலோரப் பகுதியிலிருந்து இலங்கைக்கு சில பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேதாளை கடற்கரை பகுதியில் போலீசார் நேற்று இரவு விரைந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சரக்கு வாகனத்தில் வந்தவர்கள், போலீசாரை பார்த்ததும் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு கீழே இறங்கி தப்பியோடிவிட்டனர்.

இதையடுத்து அந்த வாகனத்தை போலீசார் சோதனையிட்டத்தில், உணவுக்கு பயன்படுத்தப்படும் சுக்கு ஏராளமான மூட்டைகளில் இருப்பது தெரியவந்தது. அதிலிருந்த ஒரு டன் சுக்குவை வாகனத்துடன் போலீசார் பறிமுதல் செய்து, கடலோர காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கடத்தலில் தொடர்புடையோர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.