மண்டல பூஜைக்காக 16ம் தேதி நடை திறப்பு பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து சபரிமலைக்கு வரவேண்டும்: கேரள போலீஸ் வேண்டுகோள்
திருவனந்தபுரம்: சபரிமலைக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து சரியான நேரத்திற்கு வர முயற்சிக்க வேண்டும் என்று கேரள போலீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மறுநாள் (17ம் தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. இந்நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கேரள காவல்துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:
* சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
* பக்தர்கள் முடிந்தவரை ஆன்லைனில் முன்பதிவு செய்து சரியான நேரத்திற்கு சபரிமலைக்கு வர முயற்சிக்க வேண்டும்.
* உடனடி முன்பதிவு குறைந்த எண்ணிக்கையிலேயே அனுமதிக்கப்படும்.
* எனவே முன்கூட்டியே முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் அனைவரையும் அனுமதிப்பதில் பெரும் சிரமம் ஏற்படும். முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கு தரிசனம் செய்வதற்கு காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
* ஒரே சமயத்தில் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் வந்தால் அனைவரையும் சமாளிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட தொலைவில் இருந்து வரும் பக்தர்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு சரியான நேரத்திற்கு வரவேண்டும்.
* மலை ஏறி செல்லும்போது 10 நிமிடம் நடந்தால் 5 நிமிடம் ஓய்வெடுக்க வேண்டும்.
* பாரம்பரிய பாதையான மரக்கூட்டம், சரங்குத்தி, வரிசை வளாகம் வழியாக சன்னிதானத்திற்கு செல்லவேண்டும்.
* டோலி பயன்படுத்துபவர்கள் தேவசம் போர்டு அலுவலகத்தில் மட்டும் பணத்தை கட்டி ரசீது வாங்கிக் கொள்ள வேண்டும். உதவி தேவைப்படுபவர்கள் காவல்துறையை அணுக வேண்டும்.
* சபரிமலை கோயில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்தக் கூடாது.
* சபரிமலை செல்லும் வழியில் மது அருந்துதல், புகை பிடித்தல் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
* 18ம் படியில் தேங்காய் உடைக்கக் கூடாது.
* புனித நதியான பம்பையில் உடைகளை வீசக்கூடாது. இவ்வாறு காவல்துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அவசர தேவைகளுக்கு 14432
வாகன கோளாறு, விபத்துக்கள், மருத்துவ உதவிகள், விலங்குகள் மூலம் ஆபத்து, திருட்டு, குற்றங்கள் மற்றும் காணாமல் போகுபவர்கள் உள்பட அவசர தேவைகளுக்கு காவல்துறையின் 14432 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் சந்தேகத்திற்கிடமான நபர்களையோ, பொருட்களையோ பார்த்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.தேவைப்பட்டால் மருத்துவ மையம் மற்றும் ஆக்சிஜன் பார்லர்கள் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

