Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்: திருமாவளவன், திருமுருகன் காந்தி வலியுறுத்தல்

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்களின் கோரிக்கைகள், எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து மாஞ்சோலையில் பணியாற்றும் தொழிலாளர்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு நிருபர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது: பாதிக்கப்பட்ட மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும். அவர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் தமிழ்நாடு அரசை அனைவரும் சேர்ந்து வலியுறுத்துகிறோம். ஒப்பந்த காலம் நிறைவடைந்த நிலையில் இந்த நிறுவனம் ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டு வெளியேறுவதில் ஆட்சேபனை இல்லை.

அதனை இன்னொரு நிறுவனம் செயல்படுத்தலாம் அல்லது தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த வேண்டும். அந்த மக்களுக்கு நடப்பது மாபெரும் அநீதி. அந்த ஒப்பந்த நிறுவனத்திடம் அழுத்தம் கொடுத்து தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும். அதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும். 4 தலைமுறைகளாக அந்த மக்கள் சிந்திய ரத்தத்தை வீணடிக்காமல் அந்த மக்களுக்கு தலா 1/2 ஏக்கர் நிலம் மற்றும் உரிய இழப்பீடு பெற்று தரவேண்டும். மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு 2019ம் ஆண்டு மனை பட்டா வழங்கியது, தற்போது வரை அவர்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என்று கேள்விபட்டோம். அதனை உரிய அதிகாரிகளிடமும் தேவைப்பட்டால் முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும் என்றார்.

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசுகையில்: இன்றைக்கு மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வதற்கு உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த மக்கள் நான்கு தலைமுறைகளாக அங்கு பணியாற்றி வருகிறார்கள். வெள்ளையர் காலத்தில் அடிமை என்ற நிலையில் தான் இருந்தது. 2028ம் ஆண்டுதான் ஒப்பந்தம் முடிவடைகிறது. நான்கு ஆண்டுகள் இருக்கும் போது அந்த நிறுவனம் அங்கு உள்ள மக்களை வெளியேற்றி வருகிறார்கள். தானே பணி ஓய்வு பெறுகிறோம் என்ற வகையில் அவர்களிடம் கடிதம் பெறப்பட்டது.

ரூ.2 லட்சம் மட்டுமே கொடுத்து வெளியேற்றுகிறார்கள். அங்கு 600 குடும்பங்கள் உள்ளன. 5ம் வகுப்பு வரை மட்டுமே அங்கு உள்ளது. மேற்படிப்பிற்காக அவர்கள் கீழே இறங்கித்தான் வர வேண்டி உள்ளது. அந்த நிறுவனத்திடம் தமிழ்நாடு அரசு பேசி உரிய நிவாரணம் வாங்கித் தர வேண்டும். மாஞ்சோலை தோட்டம் லாபகரமான தேயிலை தோட்டம். மக்களுக்கு 1 ஏக்கர் நிலம் சமவெளியில் தர வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். ஜூலை 21ம் தேதி மாஞ்சோலை மக்களுக்காக அனைத்து கட்சிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் வாழ்வுரிமை மாநாடு நடைபெற உள்ளது என்றார்.