புதுடெல்லி: டெல்லியில் நடைப்பயிற்சியின்போது தமிழக பெண் எம்பி சுதாவிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற குற்றவாளியை, காவல்துறை கைது செய்து நகையை மீட்டெடுத்தது. தமிழ்நாட்டின் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்பி ஆர்.சுதா, கடந்த 4ம் தேதி டெல்லியின் மிக உயரிய பாதுகாப்புப் பகுதியான சாணக்யபுரியில் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். போலந்து தூதரகம் அருகே அவர் வந்தபோது, தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், சுதாவின் கழுத்தில் இருந்த நான்கு சவரனுக்கும் கூடுதலான நகையை பறித்துக்கொண்டு தப்பியோடினார்.
இந்தத் துணிகர சம்பவத்தில் சுதாவின் ஆடைகள் கிழிந்ததோடு, கழுத்தில் இலேசான காயங்களும் ஏற்பட்டன. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரிலும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதியதன் அடிப்படையிலும், டெல்லி காவல்துறை தீவிர விசாரணையைத் தொடங்கியது. இந்தச் சம்பவம் தொடர்பாக, கண்காணிப்புக் கேமரா பதிவுகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் உதவியுடன் துரிதமாகச் செயல்பட்ட டெல்லி காவல்துறை, இன்று குற்றவாளியைக் கைது செய்தது. அத்துடன், அவரிடமிருந்து பறிக்கப்பட்ட நகையையும் மீட்டது.