தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பாஜக நிர்வாகி: சந்தேக மரணம் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட மூவர் கைது
திருச்சி: மணப்பாறையில் பாஜக நிர்வாகி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் பாஜக நகர தலைவர், செயலாளர் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை பாஜக நகர துணை செயலராக பதவி வகித்த பாண்டியன், தனது கடையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக பாண்டியனின் மனைவி ஞானசௌந்தரி அளித்த புகாரில் தனது கணவர் கொலையில் சந்தேக இருப்பதாக தெரிவித்தார்.
தனியார் பள்ளி மற்றும் மருத்துவமனை தொடர்பாக பாஜக நகர் தலைவர் கோபாலகிருஷ்ணன், பாஜக நகர செயலாளர் சண்முக சுந்தரம், விஜயராகவன் மற்றும் உயிரிழந்த பாண்டியன் ஆகியோர் புகார் அளித்ததாகவும், பாண்டியனை மற்ற மூவரும் குற்றாலம் அழைத்து சென்றதாகவும், அப்போது பாண்டியன் பதற்றத்தோடும், மன உளைச்சலோடும் இருந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். மேலும் குற்றாலத்தில் இருந்து தொலைபேசியில் பேசும் போதும் தான் வருவேனா மாட்டேனா என தெரியவில்லை கூறியதாகவும் அவர் கூறியுள்ளார்.
மணப்பாறை திரும்பிய பாண்டியன் கடந்த 23ம் தேதி கடைக்கு சென்ற நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். ஞானசௌந்தரி அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கோபாலகிருஷ்ணன், சண்முக சுந்தரம் மற்றும் விஜயராகவனை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மூவரும் இணைந்து தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வந்தது அம்பலமானது. இது வெளியே தெரிந்துவிட கூடாது என்பதற்காகவே பாண்டியனை மிரட்டியதும், பாண்டியன் சதேகத்திற்கு இடமான வகையில் உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.