*வியாபாரிகள் வேதனை
மணப்பாறை : திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நேற்று நாள் முழுவதும் தொடர்ந்து பெய்த மழையால் வணிகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வருத்தம் அடைந்தனர்.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் மணப்பாறையில் பருவ மழையால் பெரும் மழை பொழிவு இல்லை என்ற போதிலும், அவ்வப்போது தொடர்ந்து பெய்யும் சிறு சிறு மழைகள் விவசாயிகளுக்கு பயனளித்து வருகிறது.
இருப்பினும் அவை வணிகர்களுக்கு வியாபார ரீதியாக பெரும் பாதிப்பையை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. மழை என்றாலே தேநீரும் பலகாரமும், சுடச்சுட உணவுகளும் விற்று தீர்ந்துவிடும் என்றும் எண்ணிய வியாபாரிகளுக்கு கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்கள் நடமாட்டம் குறைந்து, போக்குவரத்து முடங்கி சாலைகள் வெறிச்சோடியது.
இதன் காரணமாக டீக்கடை முதல் சிறு சிற்றுண்டிகள், பெரிய உணவகங்கள் வரை அனைத்து கடைகளிலும் உணவுப்பொருட்கள் தேக்கம் அடைந்து வியாபாரத்தில் பெறும் பின்னடைவை சந்தித்துள்ளது.
இவை மட்டுமின்றி பழச்சாறு கடைகள், பழங்கள் - காய்கறி விற்பனை, இறைச்சிக் கடைகள், ஆடைகள், ஜவுளிக்கடை, பூஜை பொருட்கள் விற்பனை எனத் தொடங்கி வீட்டு உபயோக பொருட்கள் வணிகம் வரை எந்த நிறுவனத்திலும் பெரும் அளவில் வியாபாரம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் பல லட்சக்கணக்கான வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
சம்பா பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பெய்து வரும் சாரல் மழைகளால் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் தொடர்மழை ஏற்பட்டால் விவசாயம் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை அடைந்து வரும் நிலையில், அதே நேரம் சிறு சிறு தொடர் மழைகளால் வியாபாரமும் நஷ்டம் அடைந்து வருவதாக வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.



