மானாமதுரை அருகே சாலையில் ஒரு கி.மீ தூரத்திற்கு சிதறி கிடந்த மருத்துவ கழிவுகள்: போலீசார் விசாரணை: சிசிடிவி பதிவுகள் ஆய்வு
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே, ராஜகம்பீரம் பகுதியில் நான்குவழி சாலையில் சுமார் ஒரு கி.மீ தூரத்திற்கு கையுறை, சிரிஞ்சுகள், காலி மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் சிதறி கிடந்தன. இதனால், மருத்துவ ஊசிகள் டயர்களை பஞ்சராக்க கூடும் என வாகன ஓட்டிகள், மிகுந்த எச்சரிக்கையுடன் கடந்து சென்றனர்.
மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு சுகாதார துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும், சாலையில் சிதறி கிடந்தது பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த தகவலின் பேரில் மானாமதுரை போலீசார் மற்றும் சுகாதார துறையினர் பார்வையிட்டு, ‘மருத்துவக் கழிவுகளை வாகனங்களில் இருந்து கொண்டு வரும்போது சிதறியதா அல்லது வேறும் ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.