Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மானாமதுரையில் சோமநாதர் கோயில் தேரோட்டம்

*ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

மானாமதுரை : மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுந்தனர். மானாமதுரையில் உள்ள ஆனந்தவல்லி சோமநாதர் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்.14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும் ஆனந்தவல்லி, சோமநாதர், பிரியாவிடைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிம்மம், அன்னம், குதிரை, காமதேனு, ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்பாளும் திருவீதி உலா வந்தனர். எட்டாம் திருநாளான நேற்று முன்தினம் காலை சுவாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாணமும் இரவு பூப்பல்லக்கு ஊர்வலமும் நடந்தது.

ஒன்பதாம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு ஆனந்தவல்லி அம்மனுக்கும், சோமநாதர், பிரியாவிடைக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. சோமநாதர், பிரியாவிடை பெரிய தேரிலும், ஆனந்தவல்லி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். பின்னர் கட்டிக்குளம் கிராமத்தார் முன்னிலையில் தேரின் வடக்கயிறு வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகளை செய்தனர். அதன்பின் கட்டிக்குளம், புதுக்குளம், கீழமேல்குடி, கால்பிரவு, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த கிராம பொதுமக்கள் தேரின் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

காலை 9.15 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்ட தேர் 10.20 மணிக்கு மீண்டும் நிலையை அடைந்தது. தேரில் சுவாமியும், அம்மனும் வீதிஉலா வந்த போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காலை 8.30 மணி வரை பக்தர்கள் கூட்டமின்றி இருந்த நிலை மாறி 9 மணிக்கு மேல் மானாமதுரையை சுற்றியுள்ள பல கிராமங்களில் ஆயிரக்கணக்கான கிராமத்தினர் வந்ததும் தேர் கோயிலில் இருந்து புறப்பட்டது.

மானாமதுரை டிஎஸ்பி கண்ணன் தலைமையி,ல் இன்ஸ்பெக்டர் தெய்வீகபாண்டியன், எஸ்ஐக்கள் பூபதிராஜா, பால சதீஷ்கண்ணன், சந்தனகருப்பு உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவசர மருத்துவ உதவிக்காக 108 ஆம்புலன்ஸ், மீட்பு பணிக்காக தீயணைப்புத் துறை வாகனம் வரவழைக்கப்பட்டு தேரின் பின்புறம் பாதுகாப்பாக சென்றன. மானாமதுரையில் பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு மோர், சர்பத், பானகம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.