திருவொற்றியூர்: மணலியில் உள்ள எம்எப்எல் உர தொழிற்சாலை அருகே சென்ற மக்களுக்கு அமோனியா வாயு துர்நாற்றம் காரணமாக கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் பீதி அடைந்த மக்கள் போலீசார் மற்றும் மாசுகட்டுப்பாடு வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். மணலியில் ஒன்றிய அரசுக்கு சொந்தமான எம்எப்எல் உர தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்து விவசாயத்திற்கு பயன்படும் உரம் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு எம்எப்எல் தொழிற்சாலை அருகே உள்ள சாலையில் வாகனத்தில் சென்ற பொதுமக்களுக்கு அமோனியா வாயு துர்நாற்றம் காரணமாக கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் முகத்தில் கர்ச்சிப்பை கட்டி மூடிக்கொண்டு தொழிற்சாலையை கடந்து சென்றனர்.
மேலும் டி.பி.பி சாலை, மணலி சாலை சந்திப்பில் பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசாருக்கும் மூச்சுத்திணறல் பிரச்னை ஏற்பட்டதால் அவர்கள் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் மணலி போலீசார் மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். எம்எப்எல் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் அமோனியா மூலப்பொருள் புகை போக்கி வழியாக அதிகப்படியாக வெளியேறியதால், அமோனியா வாயு காற்றில் பரவி தொழிற்சாலை அருகே சென்ற பொதுமக்களுக்கு மூச்சு திணறல் பிரச்னை ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மழை காலங்களில் அமோனியா வாயு காற்றில் பரவும் பிரச்னை அடிக்கடி ஏற்படுவதாகவும் மாசுகட்டுப்பாடு வாரியம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
