திருவொற்றியூர்: மணலி புதுநகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சரக்கு பெட்டகம் உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான கன்டெய்னர் பெட்டிகள் டிரெய்லர் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு, சுங்க அதிகாரிகள் சோதனைக்கு பிறகு வெளியே அனுப்பப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் இங்கு கன்டெய்னர் பெட்டிகளை தூக்கி வைக்கும் ராட்சத இயந்திரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றில் தீபரவி அருகில் இருந்த கன்டெய்னர் பெட்டியும் கொழுந்துவிட்டு எரிந்தது.
இதனால், அருகில் இருந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். தகவலறிந்த மணலி தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். அதற்குள் அந்த இயந்திரம் மற்றும் கன்டெய்னர் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 600 கம்ப்யூட்டர் மானிட்டர்கள் ஆகியவை முற்றிலுமாக எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து மணலி புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.