திருவொற்றியூர்: சென்னை மணலி மண்டலம் 16வது வார்டு சடையன்குப்பம், பர்மாநகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருதோடு பிளாட்டுகளாக மாற்றி பொதுமக்களுக்கு விற்பனை செய்துவருவதாக மணலி மண்டல அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.
இதன் அடிப்படையில், உதவி ஆணையர் தேவேந்திரன், உதவி பொறியாளர் விஜய் கொண்ட குழுவினர் சில நாட்களுக்கு முன் சடையன்குப்பம், பர்மா நகர் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அரசுக்கு சொந்தமான சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான 25 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம் தனியார் கட்டுப்பாட்டில் இருப்பதும் அதில் ஒரு பகுதியை லேஅவுட்களாக மாற்றி பிரித்து விற்பனை செய்ய முயற்சி செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து தனியாரிடம் இருந்த அரசு நிலத்தை மீட்டு, ‘’ இது அரசுக்கு சொந்தமான இடம், இந்தஇடத்தில் ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று 3 இடங்களில் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். இதனிடையே, நேற்றுமுன்தினம் 3 அறிவிப்பு பலகையில் ஒரு பலகையை எடுத்துச்சென்றுவிட்டனர். ‘’அறிவிப்பு பலகையை அப்புறப்படுத்திய மர்ம நபர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்ந்து சடையன்குப்பம், பர்மா நகர் பகுதியில் அரசு நிலத்தை கண்டறிந்து அனைத்தும் மீட்கப்படும்’’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அரசின் எச்சரிக்கை பலகையை அகற்றிய மர்ம நபர்கள் மீது சாத்தாங்காடு போலீசில் உதவி பொறியாளர் விஜய் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்கின்றனர்.