மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்; பாஜகவின் ‘லாலிபாப்’ ஆக இருக்காதீர்கள்: தேர்தல் ஆணையத்தை கண்டித்த மம்தா
கொல்கத்தா: வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படக்கூடாது என்றும், பாஜகவின் ‘லாலிபாப்’ ஆக இருக்கக் கூடாது என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக எச்சரித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை மற்றும் சுதந்திரமான செயல்பாடு குறித்து நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் கேள்விகள் எழுந்துள்ளன. தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும் வகையில் பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், தேர்தல் ஆணையம் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்தச் சூழலில்தான், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையத்தையும், பாஜகவையும் மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.
பர்த்வான் மாவட்டத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி, ‘என்னை மிரட்டி எதுவும் செய்ய முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேர்தல் வரும்போதெல்லாம், தேசிய குடிமக்கள் பதிவேடு வேண்டும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்க வேண்டும் என்கிறீர்கள். தேர்தல் ஆணையமே! உங்களை தலைவணங்கி கேட்டுக்கொள்கிறேன்... தயவுசெய்து பாஜக கேட்கும் கோரிக்கைகளுக்கெல்லாம் தலையாட்டும் அவர்களது லாலிபாப் (குச்சியின் நுனியில் இருக்கும் கடினமான மிட்டாய்) ஆக இருக்காதீர்கள்... நாட்டு மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்’ என்று அவர் எச்சரித்தார். வங்காள மொழி பேசும் ஒவ்வொரு குடிமகனையும் துன்புறுத்தி, அவர்களை வங்கதேசத்தவர் என முத்திரை குத்தி நாட்டை விட்டு வெளியேற்றும் பாஜகவின் திட்டத்தை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
எங்கள் குரலை நசுக்க நினைத்தால், நாங்கள் கிளர்ந்தெழுவோம். ‘ஜெய் ஹிந்த்’, ‘ஜெய் பங்களா’ ஆகிய இரண்டு முழக்கங்களையும் எழுப்புவோம். ஏனெனில், வங்காளம் எங்கள் ரத்தத்தில் ஊறியது. எங்கள் தாய்மொழிக்கு ஏற்படும் எந்த அவமானத்தையும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். மேற்குவங்க மாநிலத்திலிருந்து 22 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வெளி மாநிலங்களில் பணிபுரிகின்றனர். அவர்கள் வங்காளத்தில் பேசுவதற்காக பாஜக ஆளும் மாநிலங்களில் தாக்கப்படுகிறார்கள். ஆனால், மேற்கு வங்காளத்திற்கு வெளியே இருந்து 1.5 கோடி பேர் இங்கு வந்து வேலை செய்கிறார்கள். நாங்கள் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறோம்’ என்றும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.