சென்னை: மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையொட்டி முதலை பண்ணை உள்ளது. இந்த பண்ணை ஆசியாவிலேயே மிகப்பெரிய முதலை பண்ணையாகும். இங்கு நாட்டில் உள்ள பல்வேறு முதலை வகைகளான அமெரிக்காவில் உள்ள அலிகேட்டர், நன்னீர் முதலைகள், சதுப்பு நிலத்தில் வாழும் முதலைகள், உப்பு நீரில் வாழும் முதலைகள் உள்ளிட்ட அரியவகை முதலைகள் குளத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், அமேசான் மற்றும் ஆப்பிக்க காடுகளில் உள்ள நீர் நிலைகளில் வாழ்ந்து, மனிதர்களை அப்படியே விழுங்கும் மிகப் பெரிய ராட்சத முதலைகளும் இங்குள்ளன.
இந்நிலையில், தீபாவளி தொடர் விடுமுறையொட்டி நேற்று காலை முதல் மாலை வரை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வடநெம்மேலிக்கு வந்தனர். அங்கு நுழைவு கட்டணம் செலுத்திய பின்னர் முதலைகளை சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது, சுற்றுலாப் பயணிகள் முதலைகள் வெளியே வராமல் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலிகள் அருகே நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஒரு சில, சுற்றுலாப் பயணிகள் கம்பி வேலிக்கு அருகே சென்றபோது முதலைகள் பயணிகளை நோக்கி ஓடி வந்தது. அப்போது, அங்கிருந்த பயணிகள் பயந்து ஓடியதையும் காண முடிந்தது.