சென்னை: கடந்த 7ம் நூற்றாண்டில் மாமல்லபுரத்தை ஆட்சிபுரிந்த பல்லவ மன்னர்கள் பாறையை செதுக்கி 7 கோயில்களை உருவாக்கியதாக வரலாறு கூறுகிறது. அந்த, 7 கோயில்களில் 6 கோயில்கள் கடலில் மூழ்கியதாக கூறப்படுகிறது. மீதமுள்ள, ஒரே கோயிலான கடற்கரை கோயிலை மட்டும் தொல்லியல் துறையினர் கடல் அலைகளால் பாதிக்காதவாறு கோயிலை சுற்றி கருங்கற்களை கொட்டி கடல்நீர் உள்ளே வராமல், பாதுகாத்து பராமரித்து வருகின்றனர்.
கடலில் 6 கோயில்கள் மூழ்கி உள்ளதா, அதன் தோற்றம் எப்படி இருக்கும் என தொல்லியல் துறையின், ஒரு பிரிவான ஆழ்கடல் தொல்லியல் பிரிவினர் கடந்த 2004ம் ஆண்டு அகழாய்வு செய்தனர். அதன் பிறகு, 21 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆழ்கடல் தொல்லியல் பிரிவு கூடுதல் இயக்குனர் ஜெனரல் அலோக் திரிபாதி தலைமையில், 4 பேர் கொண்ட குழுவினர் படகில் சென்று கடலில் மூழ்கி தேடும் நவீன தொழில்நுட்ப கருவி (ஆர்ஓவி) மூலம் அகழாய்வை தொடங்கினர். அப்போது, கடலில் கோயில்கள் மூழ்கியதற்கான சான்றுகள் கிடைத்ததாக ஆழ்கடல் தொல்லியல் பிரிவினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து, ஆழ்கடல் தொல்லியல் பிரிவு கூடுதல் இயக்குனர் ஜெனரல் அலோக் திரிபாதி கூறுகையில், ‘கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பாதிப்புக்கு பிறகு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கடற்கரை கோயிலின் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளில் அகழாய்வு செய்யப்பட்டது. அப்போது, கடலில் மூழ்கிய கோயில்களின் சில தடயங்களும் கிடைத்தது. அந்த, தடயங்கள் பெரும்பாலும் பல்லவர்கள் காலத்தை சேர்ந்ததாகவும், சோழர்கள் காலத்தை சேர்ந்ததாகவும் இருந்தது.
இந்நிலையில், 21 ஆண்டுகளுக்குப் பிறகு கடலில் மூழ்கி தேடும் நவீன தொழில்நுட்ப கருவி மூலம் நேற்று மாமல்லபுரம் கடலில் 7 மீட்டர் ஆழத்தில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கடற்கரை கோயிலில் இருந்து கிழக்கு பகுதியில் 1 கி.மீ தூரத்தில் வெட்டப்பட்ட நீண்ட சுவர் போன்று இருக்கும் தடயங்கள் தென்பட்டது. வரும் காலங்களில், தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொண்டு, அந்த, தடயங்களை சேகரித்து பரிசோதித்த பிறகே எந்த ஆண்டு கட்டப்பட்டது என தெரிய வரும் என்றார்.