சென்னை: மாமல்லபுரம் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ரூ.1 கோடியில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையொட்டி அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி இயங்கி வருகிறது. இந்த, கல்லூரியில் கட்டிடக்கலை, சுதைச் சிற்பம், கற்ச் சிற்பம், மரச்சிற்பம், ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 4 ஆண்டு பயிற்றுவிக்கப்படுகிறது. இங்கு, 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரியில் நேற்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துறை அதிகாரிகளுடன் நேரில் வந்து ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள் புனரமைக்கும் பணி, மேலும் அங்கு மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவர்கள் செய்த 10 தலை ராவணன் சிலை, கற்சிற்பம், மரச்சிற்பம் உள்ளிட்ட சிற்பங்களை பார்வையிட்டார். தொடர்ந்து, அதிகாரிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டார்.
சுற்றுலா கலாச்சாரம் மற்றும் அறநிலையங்கள் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன், சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கவிதா ராமு, செங்கல்பட்டு கலெக்டர் சினேகா, திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி, திருக்கழுக்குன்றம் தாசில்தார் வாசுதேவன், கல்லூரி (பொ) முதல்வர் ராமன், சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கடேசன், சுற்றுலா அலுவலர் சக்திவேல், காஞ்சி வடக்கு மாவட்ட திமுக பொருளாளர் விசுவநாதன், திமுக கவுன்சிலர் மோகன் குமார், வருவாய் ஆய்வாளர் புஷ்பராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.