Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாமல்லபுரத்தில் கடந்த 2 ஆண்டுகளாக மதில் சுவர் இல்லாத அரசு கல்லூரி

Government College, wallsமாமல்லபுரம் : மாமல்லபுரத்தில் 2 ஆண்டுகளாக மதில் சுவர் இல்லாமல் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. எனவே, கல்லூரிக்கு மதில் சுவர் கட்டித்தர வேண்டும் என்று மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் இசிஆர் சாலையையொட்டி தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. 280க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு, சுதைச் சிற்பம், கற்சிற்பம், மரச்சிற்பம், ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் 4 ஆண்டுகள் பயிற்றுவிக்கப்படுகிறது.

கடந்த, 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் இசிஆர் சாலையை பாதுகாத்து பராமரித்து வந்தது. மேலும், இசிஆர் சாலை 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணிக்காக மாமல்லபுரம் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் இருந்து புதுச்சேரி வரை ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, புதுச்சேரி வரை 4 வழிச் சாலையாக விரிவுப்படுத்த முடிவெடுத்தது.

அப்போது, கல்லூரி மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மதில் சுவரையொட்டி சிவன் சிலை உள்ளதால், மதில் சுவரை இடிக்காமல் சாலை பணியை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், கோரிக்கையை ஏற்காமல், டெண்டர் எடுத்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை பணிக்கு இடையூறாக இருந்த கல்லூரியின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள மதில் சுவரை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. மேலும், மதில் சுவர் இடித்து அகற்றப்பட்டு, 2 ஆண்டுகளை கடந்தும் மதில் சுவர் கட்டும் பணியை மேற்கொள்ளாமல் கல்லூரி நுழைவு வாயில் பகுதி திறந்த வெளியாக காணப்படுகிறது.

இதை பயன்படுத்தி, அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வகைகளை வாங்கிக் கொண்டு, குடிமகன்கள் இரவில் வந்து அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து மது குடித்துவிட்டு அட்டகாசம் செய்வதாகவும், பகல் நேரங்களில் காதலர்கள் தங்களுக்கு சாதமாக மாற்றி கொள்வதாக புகார் எழுந்துள்ளது. மேலும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நேரில் வந்து ஆய்வு செய்து, மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை கருதி மாமல்லபுரம் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி நுழைவு வாயில் முன்பு மதில் சுவர் கட்டும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.