Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மல்லை சத்யா எனக்கு துரோகம் செய்துவிட்டார்: வைகோ குற்றச்சாட்டால் பரபரப்பு

சென்னை: ‘மல்லை சத்யா எனக்கு துரோகம் செய்துவிட்டார்’ என்று வைகோ கூறியுள்ள குற்றச்சாட்டால் மதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா இடையே மோதல் ஏற்பட்டு, அதன் எதிரொலியாக மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ சமீபத்தில் அறிவித்தார். இதனால் மதிமுகவினர் மத்தியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

அதன் பிறகு வைகோ உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் தலையிட்டு, இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். இதை தொடர்ந்து, வைகோ முன்னிலையில் இருவரும் கை குலுக்கிக் கொண்டு சமாதானம் அடைந்தனர். ஆனாலும் இருவருக்குள்ளும் பனிப்போர் அதிகரித்தே வந்தது. கடந்த சில நாட்களாகவே துரை வைகோ மற்றும் மல்லை சத்யா ஆகிய இருவருக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இவ்வாறான சூழ்நிலையில் வைகோ அளித்த பேட்டி ஒன்றில் மல்லை சத்யா மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அந்த பேட்டியில், ‘‘பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல், எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்துவிட்டார், பல போராட்டங்களில் என்னுடன் பங்கேற்றதற்காக, அவர் துரோகம் செய்யவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. அவரது நடவடிக்கை சரியில்லை’’ என்று, வைகோ குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று எதுவும் பேசாத மல்லை சத்யா, வெளிநாடுகளுக்கு வி.ஜி.பி. சந்தோஷ் என்பவருடன் சென்று வந்ததாக வைகோ கூறியுள்ளார். இதனால் மதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது என்றும், விரைவில் மல்லை சத்யா கட்சியிலிருந்து வெளியேறுவார் என்ற தகவல்கள் மதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், சென்னை மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் பூந்தமல்லியில் நேற்று நடந்தது. இதில் வைகோ கலந்துகொண்டு பேசியதாவது: மல்லை சத்யா எதிரிகள், துரோகிகளோடு நமது கட்சியை அழிக்க வேண்டும் என வெளியே போனவர்களோடு தொடர்பு வைத்திருக்கிறார். இங்கிருந்து ஒரு கூட்டத்தை அழைத்து கொண்டு போகலாம் என திட்டமிட்டிருக்கிறார். மல்லை சத்யா இரண்டு ஆண்டுகளில் ஏழு முறை வெளிநாடு சென்றுள்ளார்‌.

இதுவரை எனக்கு தகவல் சொல்லவில்லை, என்னை சந்திக்கவும் இல்லை. மதிமுகவில் எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை; கடந்த காலத்தில் செஞ்சி கணேசன் உள்ளிட்டோர் வெளியேறிய போதும் நெருக்கடி ஏற்படவில்லை. யார் கட்சியில் இருந்து வெளியேறினாலும் அது பின்னடைவை ஏற்படுத்தாது. அவர் மீது வரும் விமர்சனங்கள் தொடர்பாக நிர்வாகக் குழு கூட்டத்தில் பதிவு செய்தேன்’’. இவ்வாறு அவர் பேசினார்.

தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் மதிமுகவில் உருவாகியுள்ள சிக்கல் அக்கட்சியினர் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லியில் நடந்த கூட்டத்தில் மல்லை சத்யாவின் படம், பெயர் இடம் பெறக் கூடாது என்று தலைமை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பூந்தமல்லியில் வைக்கப்பட்டுள்ள எந்த ஒரு பேனரிலும், போஸ்டரிலும் மல்லை சத்யாவின் பெயரோ, புகைப்படமோ இடம் பெறவில்லை. இந்த நிகழ்ச்சியில் மல்லை சத்யா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* திமுக வெற்றிக்கு பாடுபடுவோம் இது என் கட்டளை

சென்னை மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ பேசுகையில், நம்மை குறிவைத்து தாக்குகிறார்கள். நமது இயக்கம் இருக்க கூடாது என நினைக்கின்றனர். மதிமுக காணாமல் போய்விட்டது, கரைந்து போய்விட்டது, வைகோ அரசியல் முடிந்து விட்டது என செய்தி போடுகிறார்கள். நேற்று முன் தினம் சாத்தூரில் நடந்த கூட்டத்தில் காலியான நாற்காலிகளை பார்த்து பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்தார்கள்.

எனவே அரங்கத்தை விட்டு வெளியே செல்லுங்கள் என கூறினேன். நான் பத்திரிகையாளர்களுக்கு விரோதி அல்ல. பத்திரிகை சுதந்திரத்திற்காக நான் பாடுபட்டவன். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது மதிமுக. அதை தடுத்து நிறுத்தியவர் பெயர்தான் வைகோ. திமுக கூட்டணியில் தான் மதிமுக இருக்கும், திமுக வெற்றிக்கு பாடுபடுவோம் இது என் கட்டளை’ என்றார்.

* துரோகி பட்டம் கொடுத்து வெளியேற்ற முயற்சி: மல்லை சத்யா

மல்லை சத்யாவின் மீதான வைகோவின் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்நிலையில், வைகோவின் குற்றச்சாட்டுகளுக்கு மல்லை சத்யா பதில் அளித்தார். அவர் கூறுகையில் ‘‘வைகோ சொன்ன வார்த்தையை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது வேதனையில் இருக்கிறேன். நான் மிகவும் காயம் பட்டிருக்கிறேன். குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவுக்கு கட்சித் தலைமையை வழங்குவதற்கு தயாராகி விட்டார். இதுவரை அவரது உயிரை மூன்று முறை காப்பாற்றியிருக்கிறேன். ஆனால் இப்போது வைகோ, தனது மகனுக்காக, எனக்கு துரோகிப் பட்டம் கொடுத்து கட்சியிலிருந்து வெளியேற்றப் பார்க்கிறார். என்னை துரோகி என்று சொல்லும் அளவுக்கு துணிந்து விட்டார்’’ என்றார்.