மாலியில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர்; தூத்துக்குடி தொழிலாளர்கள் 3 பேரை மீட்க வேண்டும்: கலெக்டரிடம் குடும்பத்தினர் கண்ணீர்
தூத்துக்குடி: மாலியில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர்கள் 3 பேரை மீட்க கோரி குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.மேற்கு ஆப்பிரிக்கா நாடான மாலியில் உள்ள கோப்ரி அருகே செயல்படும் தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த 6ம் தேதி ஆயுதம் ஏந்திய தீவிரவாத கும்பல், துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அங்கிருந்த 5 இந்தியர்களை கடத்திச் சென்றது. இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் மாலி மின்மயமாக்கல் திட்டத்துக்காக வேலைக்குச் சென்றவர்கள். இவர்கள் 5 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதில் 2 பேர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள். மற்ற மூவர் தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அடுத்த நாரைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த பொன்னுத்துரை (41), கொடியங்குளத்தைச் சேர்ந்த புதியவன் (52), கலப்பைப்பட்டியைச் சேர்ந்த பேச்சிமுத்து (42) ஆவர்.
இதனால் சோகத்தில் மூழ்கிய தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினர், 3 பேரையும் பத்திரமாக மீட்க துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சண்முகையா எம்எல்ஏ தலைமையில் தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத்தை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க மனு அளித்தனர். திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி எம்பி, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மாலியில் தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த பொன்னுத்துரை, புதியவன், பேச்சிமுத்து, இசக்கிராஜா, தளபதி சுரேஷ் ஆகிய 5 தொழிலாளர்கள், ஆயுதக் குழுவால் கடத்தப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அத்தொழிலாளர்களை மீட்டு, பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தைக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

