மாலியில் அதிர்ச்சி சம்பவம்; கடத்தப்பட்ட 5 தமிழர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை: இந்திய தூதரகம் தகவல்
பமாகோ: மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் தற்போது ராணுவ ஆட்சி நடக்கிறது. அங்கு ஆயுதம் ஏந்திய தீவிரவாத குழுக்கள் பல செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த 6ம் தேதி 5 இந்தியர்களை ஆயுதம் ஏந்திய குழுவினர் கடத்திச் சென்றதாக கூறப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட 5 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகி உள்ளது. பணி முடிந்து முகாமில் தங்கியிருந்த போது, அல்கொய்தா மற்றும் இஸ்லாமிய தீவிரவாத குழுவைச் சேர்ந்த தீவிரவாதிகள் அவர்களை கடத்திச் சென்றுள்ளனர்.
இது குறித்து இந்திய தூதரகம் நேற்று முன்தினம் தனது எக்ஸ் பதிவில், ‘‘கடந்த 6ம் தேதி மாலியில் இந்திய நாட்டினர் 5 பேர் கடத்தப்பட்ட துரதிஷ்டவசமான சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது. முடிந்தவரை அவர்களை விரைவாக பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை தூதரக அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்’’ என கூறப்பட்டுள்ளது.

