ஊட்டி : கோவை பாரதியார் பல்கலைக்கழக மொழியியல் துறை சார்பில் மலேசியாவில் உள்ள மலேயா பல்கலைகழகத்தில் மொழியியல் பயிலும் மாணவ, மாணவியர்களை வரவழைத்து அவர்களுக்கு ெமாழி மற்றும் மொழியியல் சார்ந்த பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக 8வது ஆண்டு மொழியியல் பயிற்சிக்காக 25 மலேசியா மாணவர்கள் கோவை வந்தனர். அவர்களுக்கு 3 வாரங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு பல்வேறு துறைகளின் நிபுணத்துவ மொழியியலாளர்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் விரிவுரைகளை வழங்கி வருகின்றனர்.
இந்த திட்டம் உயர் மட்டத்தில் தமிழ் மொழியியல் ஆராய்ச்சிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. பொது மொழியியல் மற்றும் பயன்பாட்டு மொழியியல் தற்போதைய போக்குகள் விரிவுரைகளில் வழங்கப்பட உள்ளன. வகுப்பறை விரிவுரைகளைத் தவிர, மாணவர்கள் கோவையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வரலாற்று மற்றும் மொழியியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஆய்வு பயணம் மேற்கொள்கின்றனர்.
இதுதவிர மேற்குத்தொடர்ச்சி மலைகளில் 2 நாள் பழங்குடி களப்பயணமும் மேற்கொள்கின்றனர். இதன் தொடர்ச்சியாக பாரதியார் பல்கலைகழக மொழியியல் துறை தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நேற்று ஊட்டிக்கு வந்தனர்.
ஊட்டி முத்தநாடுமந்து மற்றும் பகல்கோடுமந்து கிராமங்களுக்கு சென்று தோடர் பழங்குடியின மக்களின் கோயில், தோடர் பழங்குடி மக்களின் கலாசாரம், வாழ்க்கை முறை குறித்து அறிந்து கொண்டனர். மேலும் இயற்கை பாதுகாப்பு குறித்தும் தெரிந்து கொண்டனர். இதுதவிர மாவட்டத்தின் உள்ள பிற பழங்குடி மக்களையும் சந்தித்து உரையாட உள்ளனர்.