மலராத கட்சி முக்கிய நிர்வாகியின் பேஸ்புக் பதிவால் நடுங்கிப் போயிருக்கும் 3 பேரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘மலராத கட்சியின் முக்கிய நிர்வாகி பேஸ்புக் பதிவு பிரளயத்தை ஏற்படுத்தி இருப்பதுடன் லைக், கமெண்ட், ஷேரிங் குவியுதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மலராத கட்சியில் யார் அந்த 3 பேர் என்பது கடைகோடி மாவட்டத்தில் பரபரப்பாக இருக்காம்.. இந்த மாவட்டத்தை சேர்ந்த மலராத கட்சியின் முக்கிய நிர்வாகியான ஜெயமானவரு, வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவு பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறதாம்.. ‘பெண்ணுக்காகவும், பணத்துக்காகவும், பதவிக்காகவும் பேயாய் அலையும் கட்சியில் உள்ள அந்த 3 பரமாத்மாக்கள், எதையும் எதிர்பாராமல் கட்சிக்காக உழைக்கவும், உயிர் கொடுக்கவும் தயாராக இருக்கும் தொண்டர்கள் என்றாவது ஒருநாள் வெகுண்டு எழுவார்கள் என்பதை உணர்ந்தால் நல்லது’ என கூறி இருப்பதுடன், ‘மாவட்ட கட்சி தலைமையகத்தை முழுக்க கைப்பற்றி எஜமானர்களுக்கு பணிவிடை செய்பவர்கள்தான் பதவிக்கு வர முடியும் என்ற போக்கு நிலவுகிறது.. இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதற்காக இறைவனை பிரார்த்திப்போம்’ என கூறி முடித்துள்ளாராம்.. இந்த பதிவு அந்த கட்சியினரிடையே பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்காம்.. லைக், கமெண்ட், ஷேரிங் குவிந்ததுடன், போனிலும் அந்த நிர்வாகியை வாழ்த்தி, தைரியமாக பதிவு போட்டு இருக்கீங்க.. நீங்க போட்டது 100 சதவீதம் உண்மை என்று வாழ்த்தி வருகிறார்களாம்.. பதிவு போட்ட இந்த நிர்வாகி, ஏற்கனவே மலராத அந்த கட்சி சார்பில் கடைகோடி மாவட்டத்துல உள்ள சட்டமன்ற தொகுதி ஒன்றில் போட்டியிட்டவர்.. இவரு போட்ட பதிவை வைச்சு யார் அந்த 3 பேர் என்று மறுபதிவும் போட்டு மலராத கட்சிக்காரங்க பரப்பி வருகிறார்களாம்.. இந்த களேபரத்தால் தாங்கள்தானோ அது என 3 பேர் பீதியடைந்துள்ளனராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அதிகாரிகளை பழிவாங்க துடிக்கும் அமைச்சரின் தனி செயலர் மாணவர்களுக்கான இடஒதுக்கீடு கோப்பை முடக்கி வைத்து ஆட்டம் போடுகிறாரமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரி உயர்கல்வி மாணவர் சேர்க்கை (சென்டாக்) அமைப்புக்கு கடந்த ஆண்டு கன்வீனராக நியமிக்கப்பட்ட பெருமாள் அதிகாரி மீது பல்வேறு குற்றச்சாட்டு எழுந்தது.. இதனால், அப்போதைய மாநில நிர்வாகி, பெருமாளின் நியமன உத்தரவை ரத்து செய்துவிட்டார்.. தொடர்ந்து பல மாதங்களுக்கு பிறகு அதே பெருமாள், கல்வித்துறை அமைச்சர் அலுவலகத்தின் தனி செயலராக புகுந்துவிட்டார். அப்போது தன்னை போட்டுக்கொடுத்த மாணவர் சேர்க்கை அதிகாரிகளை பழிவாங்கும் விதமாக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறாராம்.. கலந்தாய்வு தொடர்பான முக்கிய கோப்புகளை தேவையில்லாமல் முடக்கி வைத்து, காலதாமதம் செய்து, சென்டாக் அதிகாரிகள் மீது அவப்பெயர் ஏற்படுத்துகிறாராம்.. கலந்தாய்வு தொடர்பாக ஏதேனும் முடிவெடுத்தால், அதனை அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லாமல், டபுள் கேம் ஆடுகிறாராம்.. அதிகாரிகளை பழிவாங்க ஆடும் ஆட்டத்தில் மாணவர்களுக்குதான் பாதிப்பு ஏற்படுகிறதாம்.. சமீபத்தில் அனைத்து படிப்புகளுக்கும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் கோப்பை முடக்கி வைத்து ஆட்டம் போடுகிறாராம்.. இதனால் ஈசனின் பெயரை கொண்ட அமைச்சருக்குத்தான் கெட்டப்பேராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மராத கட்சி கூட்டணியால் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை அடையாளம் கண்டு சரிகட்டும் வேலையில் இறங்கியிருக்கிறதாமே இலைக்கட்சி தலைமை..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மலராத கட்சியுடனான கூட்டணியை தென் மாவட்டத்தைச் சேர்ந்த இலைக்கட்சி முன்னணியினர் பலர் ஏற்றுக் கொள்ளவில்லையாம்.. இதன் வெளிப்பாடாகத்தான் சமீபத்தில் புரம் என முடியும் கடலோர மாவட்ட மாஜி மந்திரி ஒருவர் கலகக் குரல் எழுப்பினாராம்.. கூட்டணி குறித்து பட்டும், படாமலும் தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியதை சேலத்துக்காரர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையாம்.. இவரைப் போன்ற யாரும் கூட்டணி குறித்து எந்த கருத்தும் கூறிவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அவ்வப்போது முக்கிய தலைவர்கள் மாநிலம் முழுமைக்கும் உள்ள மாஜிக்கள் உள்ளிட்டோரிடம் பேசி வந்தார்களாம்.. ஆனாலும் அதையும் மீறி கடலோர மாவட்டத்தில் இருந்து வந்த கலகக் குரல், தென்மாவட்ட கட்சி முன்னணியினர் பலருக்கு ஆறுதலை தந்திருக்காம்.. அடுத்தடுத்து வரும் நாட்களில் மாஜியைப் போல பலரும் மலராத கட்சி கூட்டணிக்கு எதிராக தங்களின் கருத்துகளை வெளிப்படையாக கூறலாம் என்ற பேச்சு பரலவாக எழுந்தது.. இதை கவனித்த கட்சி தலைமை, மாஜியைப் போன்று கூட்டணி அதிருப்தியில் உள்ளவர்களை அடையாளம் கண்டு சரிகட்டும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கட்சி பணி செய்ய தினம்தோறும் கூலி கேட்டு கறார் காட்டும் நிர்வாகிகளால் மா.செ.வும், பொறுப்பாளரான மாஜி அமைச்சரும் நொந்துபோயிட்டாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தேர்தல் பணியை மஞ்சள் மாநகரில் உள்ள 4 தொகுதியிலும் இலைக்கட்சி தீவிரமாக செய்து கொண்டு வாறாங்க.. இதற்காக, தலா 9 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைத்து உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு இருக்காங்க.. ஆனா பூத் கமிட்டி உறுப்பினர்கள், கரன்சி கேட்டு நிர்வாகிகளிடம் கறார் காட்டுகிறார்களாம்.. அதாவது, கட்சி பணியை செய்ய தினந்தோறும் கூலி வேண்டும் என்கிறார்களாம்.. இதனால், இலைக்கட்சி மா.செ., செம கடுப்பில் இருக்கிறாராம்.. பணம் எல்லாம் தர முடியாது என கட் அண்ட் ரைட்டாக மா.செ., கூறிய பின்னரும், பூத் கமிட்டி உறுப்பினர்கள் முரண்டு பிடிக்கிறார்களாம்.. இதை கேள்விப்பட்டு, மேலிட பொறுப்பாளரா நியமிச்சிருக்க மாஜி அமைச்சர் நேரடியாக களத்தில் குதித்தாராம்.. இது பத்தி பேசி தீர்க்க தனியாக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தாராம்.. ஆனா பூத் கமிட்டி உறுப்பினர்களில் பாதி பேர்கூட இக்கூட்டத்திற்கு வரவில்லையாம்.. இதனால நொந்துபோன மாஜி அமைச்சர் இவங்களை வைத்து எப்படி தேர்தல் பணிகளை செய்யறதுன்னு தெரியாம புலம்பி தள்ளுகிறாராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.