மலராத கட்சியின் மாஜி போலீஸ்காரர் மீது டெல்லி மீண்டும் கோபமாக இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘கடைகோடி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை விவகாரம் நோட்டீஸ், அறிக்கை என போய்க்கிட்டு இருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடைகோடி மாவட்டத்தில் 4 வழி சாலை பணிகள் இழுவையாக நடந்துகொண்டு இருக்கு.. பணிகள் முடிக்க 2026 இறுதி ஆகிவிடும் என்கின்றனர். பணிகளை செய்கின்றவர்கள் மண்கொண்டு குளங்களை மூடுவது, கால்வாய்களை மூடுவது என்று தங்கள் விருப்பத்திற்கு பணிகள் செய்து வருகின்றனராம்.. இதனை மாவட்ட நிர்வாகம் கண்டித்ததுடன் குளங்கள், கால்வாய்கள் சார்ந்து பணிகள் செய்கிறபோது சம்பந்தப்பட்ட வருவாய்துறை, நீர்வளத்துறை, வேளாண்மை துறை அதிகாரிகளை அழைத்து அவர்கள் முன்னிலையில்தான் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட உயர் அதிகாரி உத்தரவிட்டிருந்தாராம்.. ஆனால் ‘நகாய்’ அதிகாரிகளோ எதனையும் சட்டை செய்யாமல் தான்தோன்றித்தனமாக இரவு பகல் பாராமல் பணி செய்து வர இது ஒன்றிய அரசு-மாநில அரசு அதிகாரிகளின் மோதலாக மாறிக்கொண்டு இருக்கிறதாம்.. நிலைமையை விவசாயிகள் மீண்டும் மாவட்ட உயர் அதிகாரி கவனத்தில் கொண்டு சென்றாங்களாம்.. அவரோ விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இது தொடர்பாக ‘நகாய்’ உயர் அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்ததுடன் வேளாண்மை துறை அதிகாரிகளையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மலராத கட்சியின் மாஜி போலீஸ்காரர் மீது டெல்லி மீண்டும் ரொம்ப கோபமாக இருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மலராத கட்சியின் தலைவராக இருந்த மாஜி போலீஸ்காரர், டெல்லிக்கே எச்சரிக்கை விடுத்த விவகாரம் கட்சிக்குள்ள சூட்டை கிளப்பியிருக்காம்.. மாநில தலைவர் பதவி கிடைத்தவுடன் சி.எம். ஆகி விடலாம் என்ற திட்டத்தோடு களம் இறங்கினாராம்.. வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற கதையாக வாய்க்கு வந்ததையெல்லாம் அள்ளி விட்டுக்கிட்டே இருந்தாராம்.. நேர்மையின் சிகரமாக இருப்பதாக கூறிய அவரது வீட்டின் வாடகை மாதம் ரூ.7 லட்சத்தை நண்பர்கள் கட்டிக்கொண்டு வருகிறார்கள் என அள்ளி விட்ட நிலையில், கோவையில பல கோடி மதிப்புள்ள நிலத்தை, அவரது மனைவியின் பெயருக்கு வாங்கிய விவகாரம் ேநர்மையின் உச்சமுன்னு அவங்க கட்சிக்காரங்களே கிசுகிசுக்கிறாங்க... கொங்கு மண்டலத்திற்கு தானே தலைவராக இருக்கவேண்டும் என்ற ஆசையில், இலைக்கட்சி தலைவரை சீண்டிப் பார்த்தாராம்.. இவரது வித்தையை தெரிந்து கொண்ட இலைக்கட்சி தலைவர், கூட்டணியை விட்டு அதிரடியா வெளியே வந்ததோடு, தனித்தே தேர்தலை சந்தித்து மாஜி போலீஸ்காரருக்கு இனிமா கொடுத்திட்டாராம்.. மேலும், கூட்டணி சேர வேண்டுமானால் மாஜி போலீஸ்காரரை தூக்கியே ஆக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்து, அதில் வெற்றியும் கண்டாராம் இலைக்கட்சி தலைவர்.. இதனால் சொல்லமுடியாத வேதனைக்கு ஆளான மாஜி போலீஸ்காரரோ, கட்சியில் அகில இந்திய பொதுச்செயலாளர் பதவி கேட்டதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்பது, தலைவருக்கு அடுத்த பவர் கொண்ட பதவியாம்.. ஆனா, அனுபவம் இல்லாதவர்களுக்கு அந்த பதவி கிடையாது என கைவிரிச்சிட்டாங்களாம்.. இதனால் ஷாக்கான மாஜி போலீஸ்காரரோ, உள்ளத்தில் இருக்கும் குமுறலை கொட்டி தீர்த்ததோடு, தலைமைக்கே எச்சரிக்கை விடுத்தாராம்.. கட்சியில் பிடித்திருந்தால் இருப்பேன், பிடிக்கவில்லை என்றால் நடையை கட்டப்போறேன் என்றதோடு, சமூக இயக்கமாக மாறி மக்களுக்கு சேவை செய்யப் போறேன்னும் சொல்லியிருக்காரு.. இலைக்கட்சிக்காரங்க என்னை திட்டிக்கிட்டே இருக்காங்க.. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டுன்னும் கொக்கரித்தாராம்.. ஆனால் கூட்டணியில கைகோர்த்த பிறகு, இலைக்கட்சிக்காரங்க மாஜி போலீஸ்காரரை பற்றி வாயே திறப்பதில்லையாம்... இப்படி பேசி கூடியிருக்கிற கூட்டணியை உடைக்க திட்டம் போடுவதாக தெரிஞ்சுகிட்ட அவரால் பாதிக்கப்பட்ட ரெண்டாங்கட்ட தலைவர்கள் டெல்லி தலைமைக்கு விவரத்தை தட்டி விட்டிருக்காங்க.. இதனால, மாஜி போலீஸ்காரர் மீது மீண்டும் டெல்லி ரொம்பவே கோபமா இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மூன்று மாதமா கலெக்ஷன் என்ன ஆச்சு எனக்கேட்டு அடம்பிடித்த புது எஸ்பியால பஞ்சாயத்து சீனியர் வரை போன கதை தெரியுமா...’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஆந்திராவின் காக்கிநாடா அருகே உள்ள புதுச்சேரி பிராந்தியத்தின் ஏனாம் எஸ்பியாக விஷ்ணுவின் பெயரை கொண்டவர் நியமிக்கப்பட்டார். விடுதலை நாள் விழா கொடியேற்றத்துக்கு அணிவகுப்பு வாகனம் இல்லாததால், வாடகைக்கு எடுக்கலாம் என திட்டமிடப்பட்டதாம்.. ஆனால் எதற்காக வாடகைக்கு எடுக்க வேண்டும், பழுதாகியுள்ள வாகனத்தை சரி செய்யுங்கள் என எஸ்பி கூறியுள்ளார்.. வாகனத்தை சரி செய்து எடுத்து வரும் வழியில் வாகனம் பழுதாகிவிட்டது. இதனால் மண்டல அதிகாரி நடந்து வந்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதில் மண்டல அதிகாரி டென்ஷன் ஆகிவிட்டாராம்.. இதனை கேள்விப்பட்ட எஸ்பியோ, மோட்டார் வாகனப் பிரிவை சேர்ந்த இரண்டு காவலர்களுக்கு மெமோ கொடுத்து, இவர் மட்டும் தப்பித்துள்ளாராம்.. இது மட்டுமில்லாமல் என்னப்பா.. ஊரு இது எதுவும் செழிப்பா இல்லையா? எனக்கூறி 3 மாதமாக இந்த பகுதிக்கு எஸ்பி இல்லை. அப்போது கலெக்ஷன் ஆன மாமூல் தொகை என்ன ஆச்சு, என் பங்கை உடனே தர வேண்டும் என இன்ஸ்சை போட்டு வம்பிக்கிழுத்துள்ளார்.. அதற்கு நான் என்னங்க செய்ய முடியும். 3 மாதமாக இங்கே எஸ்பி இல்லை. நான்தான் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டேன். தற்போது நீங்கள் வந்து கொடு என்றால், எங்கே போவேன், எடுத்துக்கொடுப்பேன் எனக் கூறியுள்ளார். இதில் திருப்தியடையாத எஸ்பி, இப்பிரச்னையை நேராக சீனியர் எஸ்பியின் கவனத்துக்கொண்டு சென்றாராம்.. ஐபிஎஸ் அதிகாரி என்று கூட பாராமல், மாமூல் பிரச்னையை என்னிடமே கொண்டு வருவதா? உங்கள் இரண்டு பேரையும் டிஸ்மிஸ் செய்துவிடுவேன் எனக்கூறி அவர் எச்சரித்தாராம்.. சீனியருக்கு வேண்டப்பட்ட ஒரு இன்ஸ் இருவரையும் அழைத்து பஞ்சாயத்து பேசி எஸ்பியையும், இன்ஸ்சையும் அனுப்பி வைத்தாராம்.. இப்போது கலெக்ஷன் வராத ஏனாம் வேணாம், எனக்கு பழையபடி எஸ்டிஎப் போகிறேன், பழைய கணக்கை மீண்டும் துவங்கிக்கிறேன் என்கிறாராம் எஸ்பி. எல்லாம் மாமூல் படுத்தும் பாடுதான்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
 
 
 
   