Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மலராத கட்சியில் பொன்னானவர் ஆதிக்கத்துக்கு எதிராக தேசிய தலைமைக்கு பறக்கும் மெயில்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘பொன்னானவர் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கி இருப்பதால மாநில தலைவருக்கும், தேசிய தலைமைக்கும் மெயில், வாட்ஸ்அப் பதிவுகள் பறக்குதாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘கடைகோடி மாவட்டத்தில் மலராத கட்சியில பொன்னானவர் ஆதிக்கம் மீண்டும் தலை தூக்கி இருக்காம்.. சமீபத்தில் அறிவிச்ச மாவட்ட அமைப்பு ரீதியான நிர்வாகிகள் பலரும் பொன்னானவரின் ஆதரவாளர்கள் தானாம்.. குறிப்பாக தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட அணி நிர்வாகிகள் பலரும் கட்சியில் பொன்னானவர் மூலம் அடையாளம் காட்டப்பட்டவர்களாம்.. மவுண்ட் தலைவரு காலத்துல அமைதியாக இருந்த பொன்னானவர் இப்போது புதிய தலைவரை தாஜா செய்து, பொறுப்புகள் வாங்கி கொடுத்து மீண்டும் தனது பலத்தை நிரூபிச்சிட்டு இருக்கிறாராம்.. சட்டமன்ற தேர்தல் வர நேரத்துல பொன்னானவர் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவதை அவரது எதிர்ப்பாளர்கள் பெரிசாக ரசிக்க வில்லையாம்.. ஏற்கனவே பல கோஷ்டிகள் இருக்கு.. சமூக வலைதளங்களில் பதிவுகள் போட்டு கட்சியை நாற அடிச்சிட்டு இருக்காங்க.. இந்த நிலையில மீண்டும் பொன்னானவருக்கே முக்கியத்துவம் கொடுத்து இருப்பது, கட்சியை தொடர்ந்து டேமேஜ் ஆக்கும் என்று மாநில தலைவருக்கும், தேசிய தலைமைக்கும் மெயில், வாட்ஸ் அப் பதிவுகள் அனுப்பிட்டு இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கோட்டையானவரின் அழைப்பை கேட்டு கார்களில் அணிவகுத்த ஆதரவாளர்கள் திடீரென ரைட்டில் இன்டிகேட்டர் போட்டுவிட்டு, கட்ரோட்டில் லெப்ட்டில் பறந்த கதை தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘கட்சியை ஒருங்கிணைக்க போவதாக போர்க்கொடி தூக்கிய கோட்டையானவரின் கட்சி பதவிகளை எல்லாம் பறித்து அவரோட ஆதரவாளர்களின் பதவிகளையும் பறித்து சேலத்துக்காரர் உத்தரவு போட்டார். ஒருங்கிணைப்பு பணிகளை தொடங்க கோட்டையானவர் 10 நாள் கெடு கொடுத்தார். ஆனா 50 நாட்களை கடந்தும் எதுவும் நடக்கல.. கட்சியில 2ம் கட்டத்துல இருக்கிற மணி அன்கோ தரப்பும், முக்கிய மாசெக்கள் எல்லாம் தன்னோட கருத்துக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று கருதிதான் கோட்டையானவர் போர்க்கொடியை உயர்த்தினாராம்.. ஆனா நிலைமை தலைகீழாக மாறியதால் கோட்டையானவர் கட்சியில முற்றிலும் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருக்கிறாராம்.. பதவிகள் இல்லாததால கட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டி பல நாட்களாகிவிட்டதாம்.. ஆதரவாளர்கள் கட்சி பதவியும் பறிக்கப்பட்டுவிட்டதால தன்னோட கட்சி அலுவலகத்திற்கு கூட வருவதில்லையாம்.. அதோடு சேலத்துக்காரர் அணி நிர்வாகிகள் புதுசா கட்சி அலுவலகத்தையும் தொடங்கி பிரசர் ஏற்றி வருகிறார்களாம்.. இந்த சூழ்நிலையில் தன்னோட இருப்பை காட்டிக்கொள்ள சமீபத்துல மலைப்பகுதியில் இருக்கிற ஒரு கோயிலுக்கு கோட்டையானவர் சென்றிருக்கிறார். தனக்கு இன்னும் செல்வாக்கு இருக்கிறது என்பதை காட்டிக்கொள்ள தன்னோட ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். வீட்டில் இருந்து புறப்படும் போது கோட்டையானவர் பின்னால் ஏராளமான கார்கள் அணிவகுத்து போயிருக்கு.. இதை சேலம்காரர் அணி தரப்பினர் செல்போனில் வீடியோ எடுத்திருக்காங்க.. இந்த தகவல் தெரிந்ததும் அணிவகுப்பில் கலந்துகொண்ட கோட்டையானவரின் ஆதரவாளர்கள் நமக்கு ஏன் வம்பு என்று ரைட்டில் இன்டிகேட்டர் போட்டு கட் ரோட்டில் லெப்ட்டில் பறந்து விட்டார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தீப திருநாள் களைகட்டாம போனதால ரொம்பவே இறுகிய முகத்துடன் இருக்கிறாராமே புல்லட்சாமி..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘ஆன்மிக பூமியான புதுச்சேரியில் பண்டிகை காலம் என்றால் களைகட்டுமாம்.. அதுவும் தீப திருநாளின்போது சட்டசபையே விழாக்கோலம் காணுமாம்.. அந்தளவுக்கு புல்லட்சாமியின் தாராள மனசு இருக்குமாம்.. வழக்கம்போல் இந்தாண்டும் தேர்தலை கருத்தில் கொண்டு தாராள திட்டங்களை நினைச்சிருந்தாராம்.. ஆனால் மாநில நிர்வாகியால், எதுவும் நடக்காத விரக்தியில் புல்லட்சாமி இறுகிய முகத்துடனே காணப்படுகிறாராம். இதனால் தீப பண்டிகையே சபையில் களைகட்டவில்லையாம்.. அவரால் பலனை அனுபவித்த மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பும் அப்செட்டில் உள்ளார்களாம்.. ஏற்கனவே தீப விழாவுக்காக குடும்ப அட்டைக்கு புல்லட்சாமி அறிவித்த 5 பொருள் அடங்கிய பரிசுத் தொகுப்பும் விழாவுக்கு முன்ேப வழங்க முடியவில்லையாம். பல்வேறு தடைகளை தாண்டி ஒருசில இடங்களில் மட்டுமே தீபநாளுக்கு முந்தைநாளில் பெயரளவில் விநியோகம் நடந்ததாம்.. இதனால் உள்ளூர் அட்டைவாசிகளும் விரக்தியில் உள்ளார்களாம்.. ஏற்கனவே பேடி- சாமி மோதலால் மக்கள் இன்னல்களை சந்தித்த நிலையில் தற்போதைய உரசலும் யூனியனில் அரசியல் ரீதியான விமர்சனங்களை எழுப்பி வருகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘எந்த கடையையும் விட்டு வைக்காம தீபாவளி வசூல் அள்ளிய தலைமைக்காவலர் மீது புகாருக்கு மேல புகாரா சொல்றாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘புளியந்தோப்பு சரக உதவி கமிஷனரின் வாகன ஓட்டுனராக இருக்கும் தலைமை காவலர் ஒருவர் மீது ஏகப்பட்ட புகார்கள் குவிகிறதாம்.. ஏ.சி பெயரை கூறி பேசின் பிரிட்ஜ் மற்றும் புளியந்தோப்பு காவல் நிலைய பகுதிகளில் பிரியாணி மற்றும் சாலை ஓரங்களில் கடை வைத்திருப்பவர்கள், ஓட்டல்கள் என எல்லா இடங்களிலும் மாமூல் வசூலில் கொடிகட்டி பறக்கிறாராம்.. அதுவும் தீபாவளி பெயரைச் சொல்லி ஸ்பெஷலா கவனிங்கனு கூறி ஒரு குறிப்பிட்ட தொகையை வசூல் செய்துவிட்டாராம்.. சில நாட்களுக்கு முன்னால மாநகராட்சி குப்பை லாரியில் இருந்து டீசலை கள்ளத்தனமாக விற்பனை செய்த வழக்கில் இவர் தலையிட்டு லாரி ஓட்டுனர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையையும் பறித்துக் கொண்டாராம்.. 2022ம் ஆண்டு இவர் மீது வழக்கறிஞரின் மனைவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். அதன்பிறகு தற்போது மீண்டும் செம்பியம் காவல் நிலையத்திற்கு பணிமாறுதலாகி வந்துட்டாராம்.. அயல் பணியாக புளியந்தோப்பு உதவி கமிஷனருக்கு வாகன ஓட்டுனராக இருக்காராம்.. இதை பயன்படுத்தி பல முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறாராம்.. இவை அனைத்தும் ஏசிக்கு தெரியுமா அல்லது தெரிந்தும் அவர் அமைதியாகா இருக்கிறாரா என்ற சந்தேகம் வியாபாரிகள் மந்தியில் எழுந்திருக்காம்.. எனவே, உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவங்க சம்பந்தப்பட்டவங்களுக்கு தகவல் அனுப்பி வர்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.