Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மலராத கட்சியின் மாஜி தலைவர் புது தலைவருக்கு கொடுத்து வரும் குடைச்சலை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கனிமகொள்ைள நடக்குறது தெரிஞ்சும் தெரியாம இருக்குறாங்களாமே அதிகாரிகள்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘வெயிலூர் மாவட்டத்துல கனிம கொள்ளையை தடுக்க காக்கிகள் நடவடிக்கை எடுத்து வர்றாங்க. அவங்களோட சேர்ந்து கனிமவளத்துறையும் ரெய்டு நடத்தி, கடத்தல் வாகனங்களை பறிமுதல் செய்றாங்க. கைது நடவடிக்கையும் பாயுது. அப்படி இருந்தாலும் காட்டுப்பாடிக்கு பக்கத்துல இருக்குற ஒரு ஊரான கரசத்துல தொடங்கி மங்களத்துல முடியுற ஏரியா இருக்குது. இந்த ஏரியாவுல இருக்கிற மலையில கனிமங்களை வெட்டியெடுத்து கொள்ளையடிச்சு வர்றாங்களாம். மாபியா கும்பல் அடிக்குற கொள்ளை சத்தம் அங்க இருக்குற ஊர்களுக்கு எல்லாம் நல்லாவே கேட்குதாம்.

ஆனா, அந்த ஏரியாவுல இருக்குற அதிகாரிகளுக்கு மட்டும் கேட்குதான்னு தெரியலையாம். இப்படியே விட்டா, அங்க இருக்குற மலையை சுத்தமாக வெட்டியெடுத்து, இருந்த தடமே தெரியாதது போல செஞ்சிடுவாங்கன்னு சமூக ஆர்வலருங்க வேதனை குரலை பதிவு செய்றாங்க. பல வருஷமாக நடக்குதாம் இந்த கனிமகொள்ளை, இதனால மாவட்ட உயர் அதிகாரிகள் இனியாவது ரெய்டு நடத்தி, நடவடிக்கை எடுக்கணும்னு விஷயம் தெரிஞ்சவங்களோட கோரிக்கையாக இருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மலராத கட்சியின் மாஜி தலைவர் இன்னும் பழைய உதார்ல தான் இருக்காராமே..’’ என சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தமிழ்நாட்டில் மலராத கட்சியின் மாஜி தலைவருக்கும், சிட்டிங் தலைவருக்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரிச்சிட்டே இருக்குதாம். அதிலும் குறிப்பா மேற்கு மண்டலத்தை மையமாக வைத்து மாஜி தலைவர் தனி அரசியலே செய்து வருகிறாராம். தமிழ்நாட்டிற்கு யார் வேண்டுமானாலும் தலைவராக இருந்திட்டு போகட்டும்... ஆனா மேற்கு மண்டலத்தை பொறுத்த வரை நான் தான் இங்கு தலைவர் அப்படின்னு கெத்து காட்டி வருகிறாராம் மாஜி. இது சிட்டிங் தலைவருக்கு பிரஸ்டீஜ் பிராபளத்தை ஏற்படுத்தி இருக்காம். கடந்த 2 நாளைக்கு முன்னாடி மேற்கு மண்டலத்தில் பனியன் சிட்டியில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துல சிட்டிங் தலைவர் பேசிக்கொண்டிருந்த போது மாஜி தலைவரின் பெயரை சொல்லி ஒரு கோஷ்டி தொடர்ந்து கோஷம் போட்டாங்களாம். அங்கிருந்த நிர்வாகிகள் கோஷம் போட்ட கோஷ்டியை அமைதிபடுத்தினார்களாம்.

ஆனாலும் அந்த கோஷ்டி யார் சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து கோஷம் போட்டுக்கொண்டே இருந்துள்ளது.

இதனால டென்ஷன் ஆன சிட்டிங் தலைவர் விமானத்திற்கு எனக்கு நேரமாச்சு எனவே எனது பேச்சை இத்துடன் முடிச்சிருக்கிறேன்னு சொல்லி முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாம். கட்சியில் இன்னும் தனக்கு தான் செல்வாக்கு இருக்கு. அதுவும் மேற்கு மண்டலத்துல தன்னை விட்டால் கட்சிக்கு வேறு கதியே இல்லைன்னு போலி பிம்பத்தை கட்டமைக்க அடிக்கடி இது போன்ற கோஷம் போடுகிற கரகாட்ட கோஷ்டிகளை களத்துல இறக்கிவிட்டு கூவ விட்டு அதை ரசிப்பதை மாஜி தலைவர் ஒரு ஹாபியாகவே வைத்துள்ளாராம். தலைவர் பதவியில் இருக்கிற வரைக்கும் வார் ரூம் மூலமா பதிவுகளை போட்டு போலியான பிம்பத்தை உருவாக்கி காலத்தை தள்ளிய மாஜி பதவி இழந்த பிறகு வார் ரூம் மூட வேண்டிய நிலை ஏற்பட்டதால இப்ப ஒவ்வொரு கூட்டத்திற்கும் தன்னோட கரகாட்ட கோஷ்டிகளை அனுப்பி ைவத்து கூவ விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மன்னர் மாவட்டத்தில் பாஜவில் கோஷ்டி பூசல் கொடி கட்டி பறக்க தொடங்கிவிட்டதாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘ஆமா.. இந்த மாவட்டத்தில் மத்தியில் ஆளும் பாஜ கட்சியை சேர்ந்த இரண்டு மாவட்ட தலைவர்கள் உள்ளனர். இந்நிலையில் தமிழக தற்போதைய பாஜ தலைவர் தரப்பு, முன்னாள் ஐபிஎஸ் தரப்புக்கும் இடையே பனிப்போர் நடப்பதாக சொல்கின்றனர். சமீபத்தில் புதுக்கோட்டை வந்த முன்னாள் ஐபிஎஸ்யை தலைவர் தரப்பினர் வந்து வரவேற்கவில்லையாம். இதனை காரில் சென்றபோது நிர்வாகி, ஐபிஎஸ் காதில் போட்டதாக கூறப்படுறது. இதற்கு ஐபிஎஸ் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார். இந்த விவகாரம் மன்னர் மாவட்டத்தில் பெரும் புகைச்சலே ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎஸ் தரப்புதான் நமக்கு எதிராக கொம்பு சீவிவிடுவதாக தலைவர் தரப்பு நம்புகிறதாம். இதனால் பெருவாரியான பேர் கட்சிப்பணி செய்வதில்லை. இது குறித்து டெல்லி தலைமையிடம் புகார் தெரிவிப்போம் என்று பேசி வருகின்றனர். ஆக மொத்தத்தில் மன்னர் மாவட்ட பாஜவில் கோஷ்டி மோதல் கொடி கட்டி பறக்க தொடங்கிவிட்டது என்கின்றனர் காவி தொண்டர்கள்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பல்கலைக்கழகத்துல பயங்கர திருட்டு நடக்குதாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தூங்கா நகர் பல்கலைக்கழகத்தில் மின்வயர்கள், பேட்டரிகள், மாணவர்களின் விடைத்தாள்கள் ஆகியவை அவ்வப்போது காணாமல் போவது வழக்கம். பெரும்பாலும் இதுபோன்ற பொருட்கள் காணாமல் போனால் பல்கலைக்கழக நிர்வாகம் கண்டும் காணாமல் விட்டு விடுவதும் வழக்கம். இதனால், துணிச்சல் அதிகமாகி தற்போது கைவரிசையை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஆய்வகத்தில் காட்டத் துவங்கி விட்டனராம். விலை உயர்ந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கெமிக்கல்ஸ், சோதனைக் கருவிகள் துவங்கி கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் வரை பலதரப்பட்ட விலை மதிப்பிற்குரிய பொருட்கள் அடுத்தடுத்து காணாமல் போயிருக்கிறது. இதுகுறித்து பல்கலைக்கழக அலுவலர்கள், நிர்வாகத்திடம் புகார் அளித்ததற்கு, ‘இதற்கெல்லாம் எதுக்கு சார் புகார் கொடுக்கிறீங்க? கண்டுக்காம விட்டுடுங்க’ என முக்கிய அதிகாரிகளே புகார் கொடுத்தவரை கடிந்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே ஆயிரக்கணக்கில் திருட்டு போன போதே கண்டுகொள்ளாதவர்கள், தற்போது லட்சக்கணக்கில் திருடு போவவதையும் கண்டும் காணாமல் இருப்பதால், பொருட்கள் திருடு போனதா அல்லது எடுத்துச் செல்லப்பட்டதா என்ற சந்தேகத்தை கிளப்பி இருப்பதாக வெளிப்படையாகவே முணுமுணுப்பு எழுந்துள்ளதாம். இதுகுறித்து விசாரணை நடத்தி, உண்மையைக் கண்டறிய வேண்டுமென்ற உரத்த குரல் பல்கலைக்கழக வளாகம் முழுக்க ஓங்கி ஒலிக்கிறது..’’ என்றார் விக்கியானந்தா.