Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மக்கானா சாகுபடியில் மாபெரும் மாற்றம் சாதித்த இந்தியப் பெண்!

ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் யாருக்குதான் பிடிக்காது. அதனால்தான் குழந்தை களின் மதிய உணவில் கூட இப்போது மக்கானா மிக முக்கிய இடம் பிடித்திருக்கிறது. சமீபத்திய ஆரோக்கிய உணவுகள் பட்டியலில் இணைந்திருக்கும் மக்கானா சாகுபடி இன்று இந்தியா முழுக்க முக்கிய பணப் பயிர் தொழிலாக மாறியிருக்கிறது. இதனை உணர்ந்த பிரதீபா போந்தியா கெரியா மக்கானா சாகுபடிக்காகவே 2020ஆம் ஆண்டு பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் “பீயர்ல் மிதிலா மக்கானா” என்ற பிராண்டை தொடங்கினார். இந்தியா முழுக்க உள்ள மக்களுக்கான ஊட்டச்சத்து உணவாக மக்கானாவை (Fox Nuts) தரமான முறையில் வழங்குவது மட்டுமல்லாது, பீகார் விவசாயிகளின் மக்கானா சாகுபடிக்கு நியாயமான விலையை உறுதி செய்வதற்கும் இதனை உருவாக்கியிருக்கிறார்.

அமெரிக்காவில் விவசாய விற்பனை பாரா மரிப்பில் (Agribusiness Management) டாக்டர் பட்டம் பெற்றவர் பிரதீபா. பல ஆண்டுகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சுற்றி விவசாயிகள் வாழ்வியல், நிலச்சுரண்டல், உழைப்புச் சுரண்டல், மார்க்கெட் அணுகலில் குறைபாடுகள், விவசாயிகளின் விற்பனையில் உள்ள அறியாமை ஆகியவற்றைப் பற்றிய நேரடி அனுபவங்களைச் சேகரித்தார். இதன் அடிப்படையில் விவசாயிகளுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்தி, நடுநிலையாளர்கள் இல்லாமல் நியாயமான வருமானத்தை அவர்களுக்கு வழங்குவதுதான் பிரதீபாவின் தலையாய கடமையாக மாறியது.பீகாரில், மக்கானா வெறும் தேநீர் நேர தின்பண்டம் மட்டுமல்ல. அது குடும்பத்தின் ஒரு அங்கமாகவே கருதப்படுகிறது. பிரதீபா 2018ஆம் ஆண்டு தர்பங்கா குடும்பத்தில் திருமணமாகிவந்த பின் தான் மக்கானாவுக்கான முக்கியத்துவம் என்ன என்பதை உணர்ந்து கொண்டார். இந்தியாவில் உற்பத்தியாகும் மக்கானாவின் 85% பீகாரில்தான் தயாரிக்கப்படுகிறது என்பதை உணர்ந்த அவர், ஏன் இதன் அடிப்படையில் ஒரு பிராண்டை உருவாக்கக்கூடாது என்ற எண்ணத்தில் பீயர்ல் மிதிலா மக்கானா பிராண்டைத் துவங்கினார். இதற்காக ஐ.சி.ஏ.ஆர். (ICAR), தேசிய இயற்கை விவசாய மையம் (Uttar Pradesh) போன்ற நிறுவனங்களில் பயிற்சிகளும், பயணங்களும் மேற்கொண்டார்.

மக்கானா சாகுபடியில் பாரம்ரியமாக செய்யும் விவசாய முறையே கைகொடுக்கும். விவசாயிகள் நீருக்குள் இறங்கிதான் குளங்களில் இருந்து மக்கானா விதைகளைத் திரட்டுகிறார்கள். அதை உலர்த்தி, உண்பதற்கான முறைக்கு கொண்டு வர 100க்கும் மேற்பட்ட கைமுறை நடைமுறைகள் உள்ளன. இதில் “ரஸகுல்லா மக்கானா” எனப்படும் பெரிய அளவிலான மக்கானாதான் மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. ஒரு 100 கிலோ பயிர்த் தொகுப்பில், இந்த வகை ஒரு கிலோ மட்டுமே கிடைக்கும்.பிரதீபாவின் முயற்சியால் தற்போது 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடியாக இதன் விற்பனையில் உள்ளனர். இதன்மூலம், விவசாயிகளுக்கு 30% அதிக வருமானம் கிடைக்கிறது. அவர்கள் முன்பு சந்தித்த இடைக்கால தரகர்களால் ஏற்படும் இழப்புகள் இப்போது தவிர்க்கப்பட்டுள்ளன. கூடுதலாக, விவசாயிகளின் குழந்தைகள் கல்வி செலவுகள் மற்றும் திருமண உதவிகளுக்கும் பிரதீபா நிதி வழங்குகிறார். சில விவசாயிகள் தங்கள் சொந்த பிராண்டை உருவாக்கும் அளவுக்கு பிரதீபாவால் முன்னேற்றம் கண்டுள்ளனர். விவசாயக் குடும்பங்களில் உள்ள படித்த இளைஞர்கள் தற்போது பிரதீபா வழியில் மக்கானாவை இணைய தளத்தில் மார்க்கெட் செய்து பணம் ஈட்டு முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

மக்கானா கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, தாவர புரதம் நிறைந்துள்ள உணவு. இது குறைந்த கலோரிகளைக் கொண்டது, குளூட்டன் இல்லாதது என்பதால், உடல் எடையை கட்டுப்படுத்த விரும்புவோருக்கும், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கும் மிகவும் பொருத்தமான உணவாகும். இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகளாவிய வணிக சந்தையிலும் இதற்கான தேவை அதிகரித்து வருகிறது. பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகுதான் உயர்தர மக்கானாக்கள் கிடைக்கின்றன. இயந்திர உற்பத்தி முறை இல்லாததால் சில சந்தைகளில் விலை சற்று அதிகமாகவும் இருக்கலாம். ஆனால் விவசாயிகள் மற்றும் தரத்தை மனதில் பார்க்கும் போது அது சரியான விலையாகவே கருதப்படுகிறது.

ஏன் மக்கானா இவ்வளவு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது?

மக்கானா (Makhana) ஊதா மணிப்படிவம் அல்லது தாமரை விதைகள் என அழைக்கப்படும் இவை நீர்நிலைகள் மற்றும் குளங்களில் வளரும் ஊதா தாமரை (Euryale ferox) தாவரத்தின் விதைகள். இந்தியாவின் பீகார், அசாம், மேற்கு வங்கம் போன்ற பகுதிகளில் மிகப்பெரும் பணப் பயிராக உற்பத்தி செய்யப்படுகிறது.

மக்கானாவின் முக்கியமான 10 பயன்கள்

*ஊட்டச்சத்து நிறைந்தது: புரதம், நார்ச்சத்து (fibre), கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்ததால் இது ஒரு முழுமையான சத்தான ஸ்னாக்ஸாக பயன்படுகிறது.

*குறைந்த கலோரி மற்றும் கொழுப்பு: குறைந்த கொழுப்பு (low fat) மற்றும் குறைந்த கலோரி கொண்டதால், உடல் எடையை குறைக்க விரும்புவோர் இதை டயட் உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.

*மனநல மேம்பாடு: இதில் உள்ள தையாமின் போன்ற வைட்டமின்கள் நரம்பியல் ஆரோக்கியத்தையும், மூளை செயல்பாட்டையும் மேம்படுத்தும்.

*இன்சுலின் கட்டுப்பாடு: குறைந்த கிளிசமிக் குறியீடு (low glycemic index) கொண்டதால், மக்கானா நீரிழிவு பாதுகாப்பு ஸ்நாக்ஸாக இருக்கிறது.

*இதய நலம்: மக்னீசியம் நிறைந்திருப்பதால் இருதய இயக்கத்தை சீராக வைத்திருக்கிறது. கொழுப்பு அமிலங்களை கட்டுப்படுத்தி இரத்தக்குழாய்கள் அடைபடாமல் தடுக்கும்.

*மூட்டு வலி மற்றும் மூட்டுச்சிதைவு (Arthritis) ஆகியவற்றுக்கு நன்மை: இதில் உள்ள anti-inflammatory தன்மைகள் உடல் வலிகள், மூட்டு சிராய்ப்பு போன்றவற்றைக் குறைக்க உதவுகின்றன.

*வயது மூப்பைத் தாமதப்படுத்தும்: ஃபிளேவனாய்ட்ஸ் மற்றும் ஆன்டி - ஆக்ஸிடண்ட்ஸ் சரும நலனைப் பாதுகாக்கின்றன.

*மூட்டு நார்ச்சத்து: சிறுநீரகங்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. சிறுநீர்த் தொற்று அல்லது சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்குச் சிறந்த உணவாகும்.

*கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு ஏற்றது: இளஞ்சிவப்பு இரத்தச்சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு தேவையான இரும்புச்சத்து (Iron), கால்சியம் ஆகியவை இதில் உள்ளது.

*முடி மற்றும் தோல் நலம்: தோல் சீரமைப்பு, முடி உதிர்வைக் குறைக்கும் சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. குறிப்பாக அமினோ ஆசிட்ஸ் மற்றும் ஸிங்க் இதில் அதிகம்.

எப்படி சாப்பிடலாம்?

*எண்ணெய் இல்லாமல் வறுத்து ஸ்நாக்ஸாக.

*பாலுடன் அல்லது பாயசமாக சாப்பிடலாம்.

*பொரியல்/சோயா/சட்னி போல சமையல்களில் எடுத்துக்கொள்ளலாம்.

*இப்போது மார்கெட்டுகளிலேயே மக்கானா சால்ட்/ஸ்பைஸ் வகை ஸ்னாக்ஸ்களாகக் கிடைக்கின்றன.

முக்கிய குறிப்புகள்:

*அதிகமாக சாப்பிடக்கூடாது - ஒரு நாள் 30-50 கிராம் போதும்.

*சிலருக்கு திடீர் அலர்ஜி ஏற்படும் - முதலில் சிறிதளவு சாப்பிட்டு பார்க்கவும்.

- கவின்