புதுடெல்லி: ஜிஎஸ்டியில் முக்கிய சீர்த்திருத்தங்களை அமல்படுத்துவதற்கான ஜிஎஸ்டி கவுன்சிலின் 2 நாள் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்குகிறது. கடந்த மாதம் 15ம் தேதி சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தாண்டு தீபாவளி பரிசாக ஜிஎஸ்டியில் குறிப்பிடத்தக்க மாற்றம் கொண்டு வரப்பட இருப்பதாக அறிவித்தார். கடந்த 2017ல் நாடு முழுவதும் ஒரே வரியாக அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) 5, 12, 18, 28 என 4 அடுக்குகளாக வரி வசூலிக்கப்படுகிறது. இதை 5 மற்றும் 18 சதவீதம் என 2 அடுக்குகளாக மாற்ற ஒன்றிய அரசு பரிந்துரைத்துள்ளது. குறிப்பாக அத்தியவாசிய பொருட்களின் விலையை குறைக்க இந்த பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக முடிவு எடுக்க ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமயைில் 2 நாள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்க உள்ளது. இதில் அரசின் பரிந்துரை குறித்து பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க உள்ளது. 2 அடுக்கு வரி மாற்றம் தவிர, புகையிலை, மதுபானம் போன்ற பொருட்களுக்கு 40 சதவீத வரி விதிக்கப்பட உள்ளது. மேலும் வரி வருவாய் இழப்பை ஈடுகட்ட அடுத்த 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென மாநில அரசுகள் வலியுறுத்தி உள்ளன. இதுதொடர்பாக மாநில அரசின் அனைத்து கோரிக்கைகளும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இதனால், ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவுகள் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளன.