ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 2வது சீசன் காலமான நடப்பு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தையொட்டி 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. 15 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அந்த செடிகளில் மலர்கள் பூத்துள்ளன. இவை ஓரிரு நாட்களில் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக மாடங்களில் அடுக்கி வைக்கப்படும் என தெரிகிறது.
2வது சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பூங்காவில் மகிழ்ந்து விளையாட வசதியாக பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் தயார்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூங்காவில் உள்ள சிறிய புல் மைதானம் மற்றும் பெர்ன் புல் மைதானங்கள் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது. நாள்தோறும் இந்த புல் மைதானங்களில் தண்ணீர் பாய்ச்சி சமன் செய்து சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த 2 புல் மைதானங்களுக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.