திருச்சி: திருச்சியில் எஸ்ஐ வீட்டுக்குள் புகுந்து வாலிபரை வெட்டிக் கொன்ற முக்கிய குற்றவாளி சுட்டுப்பிடிக்கப்பட்டார். திருச்சி பீமநகர் கல்லாங்குளத்தை சேர்ந்தவர் தாமரைச்செல்வன்(25). ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் சூபர்வைசராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சங்கீதா. தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. நேற்று காலை 8 மணியளவில் மார்சிங்பேட்டை பகுதியில் டூவீலரில் தாமரைச்செல்வன் வந்தார். அப்போது அவ்வழியாக 2 பைக்குகளில் வந்த 5 பேர் கும்பல், தாமரைச்செல்வன் மீது மோதியது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த தாமரைச்செல்வனை தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பதறிய தாமரைச்செல்வன் அங்கிருந்து தப்பியோடி மார்சிங்பேட்டை காவலர் குடியிருப்புக்குள் புகுந்தார். பின்னர் அந்த குடியிருப்பில் ஏ பிளாக்கில் உள்ள சிறப்பு எஸ்ஐ ஒருவரது வீட்டுக்குள் நுழைந்து சமையலறையில் பதுங்கினார். போலீஸ் அதிகாரி வீடு என்று கூட பார்க்காமல் உள்ளே புகுந்த அந்த கும்பலை எஸ்எஸ்ஐ தடுக்க முயன்றார்.
அப்போது அவரை வெட்ட முயன்றதோடு சமையலறையில் பதுங்கியிருந்த தாமரைச்செல்வனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து பைக்குகளில் தப்பி சென்றது. அப்போது திருவானைக்காவல் இளமாறன்(19) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். மற்ற 4 பேரும் தப்பி விட்டனர். இதையடுத்து பாலக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தாமரைச்செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தாமரைச்செல்வனுக்கு திருமணம் நடந்தது. தாமரைச்செல்வனின் மனைவி ஒத்தக்கடையில் உள்ள பெயின்ட் விற்பனை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு லால்குடி அடுத்த கீழவாளாடியை சேர்ந்த சதீஷ்குமார்(26) என்பவர் விற்பனை பிரதிநிதியாக இருந்தார்.
அவர் பெயின்ட் விற்பனை செய்ததில் ரூ.1.20 லட்சத்தை நிறுவனத்தில் கட்டாமல் இருந்தது குறித்து கேட்டதால் தாமரைச்செல்வனின் மனைவியை தகாத வார்த்தையில் பேசியுள்ளார். இதுகுறித்து மனைவி கூறியதால் ஓராண்டுக்கு முன் தாமரைச்செல்வன், பெயின்ட் விற்பனை நிறுவனத்துக்கு சென்று சதீஷ்குமாரை திட்டி தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் தனது நண்பர்களான பிரபாகரன்(24), இளமாறன்(19), கணேசன்(18), நந்தக்குமார்(20) ஆகியோருடன் வந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஒரு இடத்தில் பதுங்கியிருந்த கணேசன், பிரபாகரன், நந்தகுமாரை பிடிப்பதற்காக பாலக்கரை போலீசார் சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றனர். இதில் தடுமாறி கீழே விழுந்து கணேசன், பிரபாகரன் ஆகியோருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. நந்தகுமாருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
3 பேரையும் கைது செய்து சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளியான சதீஷ்குமார், ரங்கம் கொள்ளிடம் நீரேற்று நிலையம் அருகே பதுங்கி இருப்பதாக ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் திருவானந்தத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்றிரவு அந்த இடத்துக்கு போலீஸ்காரர்கள் மாதவராஜ்(32), ஜார்ஜ் வில்லியம்(37) ஆகியோர் சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் சதீஷ்குமார் தான் மறைத்து வைத்திருந்த பெரிய வாளை எடுத்து காண்பித்து இங்கிருந்து செல்லுமாறு மிரட்டினார். இதனால் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் தான் வைத்திருந்த 9 எம்எம் துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டார். இதனால் வாளை எடுத்து மாதவராஜ், ஜார்ஜ் வில்லியம் ஆகியோரை சதீஷ்குமார் வெட்டி விட்டு தப்பிக்க முயன்றார். இதனால் தற்காப்புக்காக சதீஷ்குமாரை நோக்கி திருவானந்தம் சுட்டார்.
இதில் சதீஷ்குமாரின் வலதுகால் முட்டியில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து போலீசார், சதீஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் காயமடைந்த போலீஸ்காரர்கள் மாதவராஜ், ஜார்ஜ் வில்லியம் ஆகியோருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
