சதாரா: எஸ்ஐ பலாத்காரம் செய்ததால் பெண் டாக்டர் தற்கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள கோதர்பன்-கவட்காவ் கிராமத்தைச் சேர்ந்த 28 வயது பெண் மருத்துவர், பால்டனில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். கடந்த வியாழக்கிழமை இரவு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரின் உள்ளங்கையில், தற்கொலை குறிப்பு எழுதப்பட்டிருந்தது. கடந்த 5 மாதங்களாக காவல்துறை துணை ஆய்வாளர் கோபால் பதானே தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் மென்பொருள் பொறியாளரான பிரசாந்த் பங்கார் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால் தான் விபரீத முடிவை எடுப்பதாக மருத்துவர் எழுதி வைத்துள்ளார்.
அதன் அடிப்படையில் போலீஸ் கோபால் பதானே மீதும் பிரசாந்த் பங்கார் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து முதல்வர் பட்நவிஸ், பெண்ணின் தற்கொலை குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள துணை ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன் படி, உடனடியாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பெண் மருத்துவர் தற்கொலை மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்றும் இச்சம்பவம் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதை காட்டுகிறது என்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் கண்டனம் தெரிவித்தார்.
