மகாராஷ்டிராவில் பரபரப்பு பா.ஜ பெண் அமைச்சரின் உதவியாளர் திடீர் கைது: மனைவி தற்கொலை வழக்கில் நடவடிக்கை
மும்பை: மகாராஷ்டிரா பெண் அமைச்சர் பங்கஜா முண்டேவின் உதவியாளரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவரை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் அமைச்சரவையில் பாஜவைச் சேர்ந்த கால்நடை பராமரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் பங்கஜா முண்டே. இவரது தனிப்பட்ட உதவியாளர் அனந்த் கார்ஜே. இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கவுரி பால்வே என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. கவுரி பால்வே, கேஇஎம் அரசு மருத்துவமனையில் பல் மருத்துவராக பணியாற்றி வந்தார். திருமணம் நடைபெற்ற சில நாட்களிலேயே தம்பதி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
‘கடந்த சனிக்கிழமை மாலை, கவுரி பால்வே ஒர்லியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கவுரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து கணவர் அனந்த் கார்ஜே, கவுரியை சித்ரவதை செய்து தினமும் துன்புறுத்தியதாகவும் அதனால் அவர் தற்கொலை முடிவை எடுத்ததாகவும் கவுரியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். மேலும் கவுரியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், கார்ஜேவுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததுள்ளது. புகாரின்பேரில் போலீசார் கர்ஜே மற்றும் அவரது உறவினர்கள் 2 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கிழ் வழக்குப்பதிவு செய்து நேற்று காலை அவரை கைது செய்தனர்.



