புதுடெல்லி: மகாராஷ்டிராவைப் போல் பீகார் சட்டப்பேரவைக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி உள்ளன. பீகார் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 22ம் தேதியுடன் முடிகிறது. இதனால் 243 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை முடிந்ததை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தேர்தல் தேதி அறிவிப்பது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் 2 நாள் பயணமாக பீகார் சென்றனர். அங்கு தேர்தல் ஆயத்த பணிகளை ஆய்வு செய்த தேர்தல் ஆணையர்கள், 2வது நாளாக நேற்று அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், பல்வேறு கட்சிகளும் தேர்தலை சத் பூஜைக்கு பிறகு நடத்த வேண்டுமென வலியுறுத்தின.
தீபாவளிக்கு 6 நாட்களுக்கு பிறகு சத் பூஜை பீகாரில் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சத் பூஜை அக்டோபர் 25 முதல் 28ம் தேதி வரை 4 நாட்கள் நடக்க உள்ளது. இதற்காக வெளிமாநிலங்களில் பணியாற்றும் பீகார் மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள் என்பதால் சத் பூஜை முடிந்ததும் தேர்தல் நடத்தினால் அதிகமானோர் தேர்தலில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என ஆர்ஜேடி உள்ளிட்ட எதிர்க்கட்சி பிரதிநிதிகளும் வலியுறுத்தினர்.
கடைசியாக 2020ல் நடந்த சட்டப்பேரவை தேர்தல் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் 3 கட்டமாக நடத்தப்பட்ட நிலையில் இம்முறை மகாராஷ்டிராவை போல் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். அல்லது 2 கட்டங்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்றும் பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை கேட்ட தேர்தல் ஆணையர்கள், வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குச்சாவடி முகவர்கள் தலைமை அதிகாரியிடமிருந்து படிவம் 17சிஐ பெற்றுக் கொள்ள அறிவுறுத்தினார். அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்பு கூட்டத்தை முடித்துக் கொண்டு தேர்தல் ஆணையர்கள் பாட்னாவில் இருந்து நேற்று டெல்லிக்கு புறப்பட்ட நிலையில், இன்னும் ஓரிரு நாளில் பீகார் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* புர்கா அணிந்த பெண்களின் அடையாளத்தை சரிபார்க்க வேண்டும்
பாஜ சார்பில் பங்கேற்ற பீகார் மாநில பாஜ தலைவர் திலீப் ஜெய்ஸ்வால், வாக்காளர்களின் முகங்களை, குறிப்பாக புர்கா அணிந்த பெண்களை, அவர்களின் வாக்காளர் அட்டையில் உள்ள புகைப்படத்துடன் ஒத்துப்போகிறதா என்பதை சரிபார்க்க வேண்டுமென வலியுறுத்தினார். இதன் மூலம் உண்மையான வாக்காளர்கள் மட்டுமே தங்கள் வாக்குரிமை செலுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
இதற்கு எதிர்க்கட்சியான ஆர்ஜேடி பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் முடிந்து புதிதாக வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள நிலையில், பாஜ தனது சொந்த சித்தாந்தத்திற்காக இத்தகைய கோரிக்கை விடுப்பதாகவும் இது அரசியல் சதி என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.