மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில், 3 பெண், 1 ஆண் என 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாய். 27 வயதான அப்பெண்ணுக்கு, முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள், 2வது பிரசவத்தில் 1 குழந்தை, தற்போது 3வது பிரசவத்தில் 4 குழந்தைகள் என மொத்தம் 7 குழந்தைகள் பிறந்துள்ளன!
சத்தாரா மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் கடந்த வெள்ளிக்கிழமை கோரேகாவ் பகுதியை சேர்ந்த காஜல் விகாஸ் ககுர்தியா(வயது 27) என்ற கர்ப்பிணி ஒருவர் மூச்சுத்திணறல் மற்றும் பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், அந்தப்பெண் 4 குழந்தைகளை வயிற்றில் சுமந்து வந்தது தெரியவந்தது.
எனவே நிலைமையின் தீவிரத்தையும், தாயின் பலவீனமான உடல்நிலையை கருத்தில் கொண்டும் உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் பிரசவத்துக்கு முடிவு செய்யப்பட்டது. இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை மகப்பேறு மருத்துவர் டாக்டர் சிதாசிவ் தேசாய், டாக்டர் துஷார் மஸ்ராம், மயக்க மருந்து நிபுணர் நீலம் கடம் உள்ளிட்ட டாக்டர்கள் அடங்கிய குழு மேற்கொண்டது.
ஆஸ்பத்திரி டீன் டாக்டர் விநாயக் காலே வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. 4 குழந்தைகளும் தாயின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டது. இதில் 3 பெண் குழந்தைகள். ஒரு ஆண் குழந்தை ஆவர். தாயும், 4 குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.
ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறப்பது என்பது அரிதிலும், அரிதான நிகழ்வு என்றும், 10 லட்சத்தில் இருந்து 5 கோடி பிரசவத்திற்கு ஒருமுறை மட்டுமே இதுபோன்ற பிரசவம் பதிவாகிறது என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். 4 குழந்தைகளை பிரசவித்த காஜல் இதற்கு முன்பு இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தவர். இவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை பிறந்து இருந்தது. இதனால் காஜலுக்கு மொத்தம் 7 குழந்தைகள் உள்ளது.