மும்பை: மும்பையில் புதிதாக திறக்கப்பட்ட பிகேசி டெஸ்லா ஷோரூமில் இருந்து இந்தியாவின் முதல் டெஸ்லா காரை மகாராஷ்டிரா அமைச்சர் பிரதாப் சர்நாயக் வாங்கினார்.
அமெரிக்க கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் கடந்த ஜூலை மாதம் திறந்தது. இந்த ஷோரூம் திறக்கப்பட்ட உடனே போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சர்நாயக், டெஸ்லா ஒய் மாடல் காரை வாங்குவதற்காக முன்பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் நேற்று மும்பை பிகேசி ஷோரூமில் இருந்து முதல் டெஸ்லா கார், அமைச்சர் பிரதாப் சர்நாயக்கிற்கு டெலிவரி செய்யப்பட்டது. காரை வாங்கிய சர்நாயக் கூறியதாவது: பசுமை இயக்கம் குறித்த முதல்கட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, எனது பேரனுக்கு இந்த காரை பரிசளிக்க திட்டமிட்டுள்ளேன். மக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக டெஸ்லா காரை வாங்கினேன்.
குழந்தைகள் இந்த கார்களை பார்த்து, நிலையான போக்குவரத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து, அடுத்த பத்தாண்டுகளில் ஒரு பெரிய எலக்ட்ரிக் வாகன புரட்சியை ஏற்படுத்துவதற்கான இலக்கை மகாராஷ்டிரா நிர்ணயித்துள்ளது என்றார்.