Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மகாராஷ்டிராவில் பரபரப்பு; பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு அஜித்பவார் கடும் மிரட்டல்: வீடியோ வைரல்

மும்பை: மகாராஷ்டிராவில் ஒரு கிராமத்தில் சட்டவிரோத நடவடிக்கையை தடுத்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை செல்போனில் அழைத்து துணை முதல்வர் அஜித்பவார் மிரட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் சாலை கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்படும் கிராவல் மண்ணை சட்டவிரோதமாக அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை தடுத்த உள்ளூர் அதிகாரிகளையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.

தாசில்தாரர் அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஐபிஎஸ் அதிகாரி அஞ்சலி கிருஷ்ணா, அவர்களை தடுத்து நிறுத்தினார். உடனே துணை முதல்வர் அஜித்பவார், தனது கட்சிக்காரர் ஒருவரது செல்போனில் இருந்து அஞ்சலியை தொடர்பு கொண்டார். நடவடிக்கை எடுப்பதை நிறுத்திவிட்டு அங்கிருந்து செல்லும்படி கூறினார். ஆனால் தங்களது குரலை அடையாளம் காண முடியவில்லை என அஞ்சலி தெரிவித்தார்.

‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரிகிறது, ஆனால் நான் துணை முதல்வருடன் பேசுகிறேனா என்பது எனக்கு தெரியவில்லை. தயவுசெய்து என்னுடைய செல்போன் எண்ணுக்கு போன் செய்ய முடியுமா?’ என கேட்டார். இதைக் கேட்டு கோபமடைந்த அஜித்பவார், ‘நான் வீடியோ கால் செய்தால் என் முகத்தை அடையாளம் காண முடியுமா?’ என்று ஆக்ரோஷமாக பேசினார். பின்னர் ஐபிஎஸ் அதிகாரிக்கு வீடியோ கால் செய்து, மண் அள்ளுவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை நிறுத்துமாறு உத்தரவிட்டார்.

‘நீங்கள் நடவடிக்கை எடுப்பதை நிறுத்திவிட்டு உங்கள் அலுவலகத்திற்கு திரும்பிச் செல்லுங்கள். துணை முதல்வர் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை என தாசில்தாரரிடம் சொல்லுங்கள். இல்லையெனில் துணை முதல்வர் உத்தரவை மீறியதாக உங்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும்’ என மிரட்டினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில், உத்தவ் சிவசேனா கட்சித் தலைவர் சுஷ்மா அந்தாரே உள்ளிட்ட பலர் அஜித்பவாருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.