Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மகாராஷ்டிராவில் இந்தி திணிக்கப்பட்டால் பள்ளிகளை இழுத்து மூடுவோம்: ராஜ் தாக்கரே எச்சரிக்கை

தானே: மகாராஷ்டிராவில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் திணிக்கப்பட்டால் பள்ளிகளை இழுத்து மூடுவோம் என ராஜ் தாக்கரே கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் பாஜ தலைமையிலான அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி கடந்த மாதம் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தி பாடம் கட்டாயமாக்கப்படுவதாக அறிவித்தது. இதற்கு மாநிலம் முழுவதும் பல்வேறு எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. மேலும் இந்தி திணிப்பை எதிர்த்து மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே மற்றும் உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் கூட்டு போராட்டம் அறிவித்தனர்.

இதனையடுத்து மும்மொழிக் கொள்கை தொடர்பான அரசாணைகளை அரசு ரத்து செய்தது. பின்னர் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த பரிந்துரைக் குழுவையும் அமைத்தது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை முதல்வர் பட்நவிஸ் 3வது மொழி பாடம் விருப்ப பாடமாகவும், பரிந்துரை குழுவின் பரிந்துரைப்படி செயல்படுத்தப்படும் என கூறினார்.

இதனையடுத்து மீரா பயந்தரில் நடந்த கட்சி பேரணியில் ராஜ் தாக்கரே பேசியதாவது:

முதல்வர் பட்நவிஸ் ஏற்கனவே ஒருமுறை இந்தியை திணிக்க முயற்சி செய்தார், நாங்கள் கடைகள் அனைத்தையும் மூடினோம். தற்போது மீண்டும் இந்தியை திணிக்க முயற்சி செய்தால் பள்ளிகளை இழுத்து மூட தயங்க மாட்டோம். இந்தியை திணித்து மும்பையை குஜராத்துடன் இணைக்க அரசு முயற்சி செய்கிறது. இந்தி வெறும் 200 ஆண்டுகள் பழமையானது, ஆனால் மராத்தி மொழிக்கு 3,000 ஆண்டுகள் வரலாறு உள்ளது. பீகாரில் இருந்து குஜராத்துக்கு குடியேறியவர்கள் அடித்து விரட்டப்பட்டபோது, அது பிரச்னையாக மாறவில்லை. ஆனால் மகாராஷ்டிராவில் நடக்கும் ஒரு சிறிய சம்பவம் தேசிய பிரச்னையாக மாறுகிறது. மகாராஷ்டிராவில் இந்துத்துவா போர்வையில் இந்தி திணிப்பு நடக்கிறது. மகாராஷ்டிரா மக்கள் அனைத்து இடங்களிலும் மராத்தியில் பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.