மும்பை: மஹாராஷ்டிராவில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, 10 பேர் உயிரிழந்தனர். ம்பை, தானே, நாசிக் உள்ளிட்ட இடங்களுக்கு வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. மஹாராஷ்டிராவில் மும்பை, தானே உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கொலாபாவில் 12 செ.மீ., மழையும், சாண்டா க்ரூசில் 9 செ.மீ., மழையும் பதிவானது. சில இடங்களில், 5 மணி நேரத்தில், 5 செ.மீ., மழை பெய்தது. இதனால், நகரின் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாகின. உடனடியாக மும்பை மாநகராட்சி ஊழியர்கள் தேங்கிய நீரை அகற்றினர்.
ஹிண்ட்மாதா, காந்தி மார்க்கெட், சுனாபட்டி, மலாட், தஹிசர் மற்றும் மன்குர்ட் சுரங்கப்பாதைகளில் தேங்கிய தண்ணீரும் பம்பு செட்கள் வைத்து அகற்றப்பட்டன. மும்பை, தானே, பால்கர், ராய்காட் உள்ளிட்ட இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக 10 பேர் உயிரிழந்தனர். மழையால் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து 11,800க்கு மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஆற்றின் கரையோர உள்ள கோவில்கள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக மீட்பு பணி மேற்கொள்ள வேண்டும் என மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.