மகாராஷ்டிரா: சத்தீஸ்கர் மாநிலத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் கட்ச்ரோலியில் 60 மாவோயிஸ்டுகள், பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்துள்ளனர். இந்தியாவில் ஆயுதப் புரட்சி மூலம் கம்யூனிச அரசை அமைப்பதற்காக போராடுகின்றனர் மாவோயிஸ்டுகள். ஆனால் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான பாதுகாப்பு படையினர் நடவடிக்கை மிகவும் தீவிரமானது. இதனால் மாவோயிஸ்டுகள் இயக்க தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர். பல நூற்றுக்கணக்கான மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து வருகின்றனர்.
இந்தியாவில் இனி ஆயுதப் புரட்சி மூலம் கம்யூனிச அரசை அமைக்க முடியாது என்பதால் ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதாக மாவோயிஸ்டுகளில் ஒரு பிரிவினர் அறிவித்து சரணடைந்தனர். இதற்கு எதிர்ப்பு எழுந்ததால் மாவோயிஸ்டுகள் இயக்கத்தில் பிளவும் ஏற்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் ஏராளமான மாவோயிஸ்டுகள் அடுத்தடுத்து சரணடைந்தும் வருகின்றனர்.
இந்த பின்னணியில் மகாராஷ்டிராவில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள கட்ச்ரோலி மாவட்டத்தில் அந்த அமைப்பின் பொலிட்பீரோ உறுப்பினர் சோனு என்ற மல்லோஜூல வேணுகோபால ராவ் தலைமையில் 60 மாவோயிஸ்டுகள், ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்துள்ளனர்.