Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மகாராஷ்டிர தேர்தல் முறைகேடு அம்பலம்: எஸ்எம்எஸ் அனுப்ப காங்கிரசுக்கு தடை; ஒன்றிய அரசு அமைப்புகள் மீது குற்றச்சாட்டு

புதுடெல்லி: மகாராஷ்டிரா தேர்தல் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதைத் தடுக்க ஒன்றிய அரசு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்படுவதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தலின்போது, ஆலந்தா சட்டமன்றத் தொகுதியில் ‘வாக்குத் திருட்டு’ நடைபெற்றதாகக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். வாக்காளர்களை நீக்குவதற்காகப் போலி படிவம் 7 பயன்படுத்தப்பட்டதாகவும், இந்த முறைகேடு அம்பலமானதைத் தொடர்ந்து மாநில குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால், இந்த விசாரணைக்குத் தேவையான முக்கிய ஆவணங்களைத் தேர்தல் ஆணையம் தற்போது வழங்க மறுத்து, முறைகேட்டின் பின்னணியில் உள்ளவர்களைக் காப்பாற்ற முயற்சிப்பதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள், தற்போது மகாராஷ்டிர விவகாரத்திலும் இதே போன்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் முன்வைத்துள்ளது. மகாராஷ்டிராவில் 2024ம் ஆண்டு தேர்தல் எவ்வாறு ‘திருடப்பட்டது’ என்பது குறித்த ஆவணப்படத்தின் இணைப்பைத் தனது கட்சித் தொண்டர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்ப காங்கிரஸ் கட்சி, இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் (டிராய்) விண்ணப்பித்திருந்தது. ஆனால், இது போராட்டத்தை தூண்டும் விதமாக இருப்பதாக கூறி, எஸ்எம்எஸ்களை அனுப்ப டிராய் அமைப்பு அனுமதி மறுத்துவிட்டது.

டிராயின் இந்த முடிவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், உண்மையை மறைப்பதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சகம், தேர்தல் ஆணையம் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், டிராய் அமைப்பு பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு போலச் செயல்படுவதாகவும், ஒரு யூடியூப் இணைப்புக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏன் இவ்வளவு அஞ்ச வேண்டும் எனவும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.