கடலூர் : மகாளய அமாவாசையையொட்டி நீர் நிலைகளில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.புரட்டாசி, தை, ஆடி அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. வழக்கமாக அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுக்காதவர்களும், மகாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு மகாளய அமாவாசை நேற்று கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி, கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர். இதேபோல் கடலூர் தென்பெண்ணை ஆறு, கெடிலம் ஆறு உள்ளிட்ட பல நீர் நிலை பகுதியில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் சிவகங்கை தீர்த்த குளத்தில் மாகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தொடர்ந்து நடராஜர் கோயிலுக்கு சென்று நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளை தரிசனம் செய்தனர்.
மேலும் கோயில் வளாக பகுதியில் இருக்கும் கோவிந்தராஜ பெருமாள், தாயார் மற்றும் பாண்டிய நாயகர் சன்னதி, நவக்கிரகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தனர். கோயிலில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதேபோல் தில்லை காளியம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.