மானாமதுரை: மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டுமென்று பயணிகள் சங்க நிர்வாகிகள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் வருகின்றனர். குறிப்பாக, மகாளய. அமாவாசை என்று அழைக்கப்படும் புரட்டாசி அமாவாசையன்று முன்னோர்களுக்கு திதி குடுக்க இந்தியா முழுவதும் இருந்து ராமேஸ்வரத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இதையொட்டி தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ராமேஸ்வரம் வரும் பயணிகள் வசதிக்காக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் ஆண்டுதோறும் இயக்கப்படுகின்றன. இதன்படி மதுரை, திருச்சி, சேலம், சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கு ரயில் பயணம் வசதியாக இருக்கும் என்பதால் மகாளய அமாவாசையன்று சிறப்பு ரயில் இயக்கவேண்டும் என்று பயணிகள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ரயில் பயணிகள் சங்க நிர்வாகி கெங்காதரன் கூறியதாவது: ஆடி அமாவாசை, தை அமாவாசையன்று மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி மகாளய அமாவாசைக்காக மதுரை, விழுப்புரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கவேண்டும்.
கடந்த ஆடி அமாவாசையன்று இயக்கப்பட்ட சிறப்பு ரயில் மதுரையில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 2:30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைந்தது. மறுமார்க்கத்தில், அதிகாலை 3 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு காலை 6 மணிக்கு மதுரை சென்றது. இந்த இரு ரயில்களும், மதுரை கிழக்கு, திருப்புவனம், மானாமதுரை, பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் ரயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றி சென்றது.இந்த முறை மதுரையில் இருந்து அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும் வகையிலும், ராமேஸ்வரத்தில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு 12 மணிக்கு மதுரை செல்லும் வகையிலும் சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டும்.
அதே போல ஏற்கனவே விழுப்புரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் அதே நேரத்தில் மீண்டும் இயக்கப்பட வேண்டும். இதன் மூலம் ேசலம், சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் இருந்து விழுப்புரம் வரும் பயணிகள், அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் ராமேஸ்வரத்திற்கு எளிதில் சென்று வர முடியும். எனவே, இதுகுறித்து மதுரை, திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.