Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுரவாயலில் நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.பி டி.ஆர்.பாலு ஆய்வு

சென்னை: மதுரவாயலில் நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி டி.ஆர்.பாலு ஆய்வு செய்தனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (25.10.2025) வளசரவாக்கம் மண்டலம். மதுரவாயல் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நகர், மேட்டுக்குப்பம் சாலை, பாரதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட முகாமினை திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வுக்காணும் வகையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பிறகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

"நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட முகாம் ஆய்வு

நலம் காக்கும் ஸ்டாலின் எனும் மகத்தான திட்டம் 02.08.2025 அன்று சென்னையில் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை அன்று தமிழ்நாட்டில் உள்ள 38 வருவாய் மாவட்டங்களிலும் இந்த முகாம் நடைபெறுகிறது. மேலும் இந்த முகாம் கடந்த வாரம் வரை 11 முகாம் என்கின்ற வகையில் இதுவரை 407 முகாம் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் 6,37,089 பேர் பயனடைந்திருக்கிறார்கள். இந்த திட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாடு முழுவதும் 1256 முகாம்கள் நடத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும், சென்னைக்கு அடுத்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 5 மாநகராட்சிகளில் தலா 4 வீதம் 20 முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 19 மாநகராட்சிகளில் தலா 3 வீதம் 57 முகாம்கள் என்கின்ற அளவிலும், தமிழ்நாட்டில் உள்ள 388 வட்டாரங்களில் தலா 3 என்கின்ற வகையிலும் ஆக ஒட்டு மொத்தம் 1,256 முகாம்கள் நடத்தப்படும் என்று முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு இதுவரை 407 முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. இத்திட்டம் மக்களை பெரிய அளவில் கவர்ந்திருக்கின்றது. இன்று இந்த முகாம் 12வது வாரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் இம்முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இருதய மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், மகப்பேறியியல் மற்றும் மகளிர் நல மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், இயன்முறை மருத்துவம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், நுரையீரல் மருத்துவம், நீரிழிவு மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, சித்தா மற்றும் இந்திய முறை மருத்துவம் போன்ற 17 வகையான மருத்துவ முறைகள் இந்த முகாம்களில் நடத்தப்படவிருக்கிறது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் முழு உடற்பரிசோதனைகளுக்கு ரூ.20,000/- வரை செலவாகும்.

அரசு மருத்துவமனைகளில் கூட ரூ.4,000/- வரை செலவாகும். ஆனால் கட்டணமின்றி இந்த முகாமில் முழு உடற்பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இன்னொன்று மிக முக்கியமான சேவையாக அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் ஒவ்வொரு முகாமிற்கும் அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு முழு உடற் பரிசோதனை செய்யப்படுகிறது. அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு மிகப் பெரிய சேவை செய்யப்படுவது என்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதல்முறை. மேலும் இந்த முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் தரப்பட்டு வருகிறது.

இந்த சான்றிதழ் பெறுவதற்கு மருத்துவர்களின் ஆலோசனை, மருத்துவர்களிடத்தில் அவர்களுக்கு எத்தனை சதவிகிதம் அளவிற்கு பாதிப்பு இருக்கின்றது என்று அறிந்து சான்றிதழ் வழங்குதல், தொடர்ந்து வருவாய் அளவில் சான்றிதழ் பிறகுதான் மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற முடியும் என்கின்ற நிலை இருந்தது. எனவே மாற்றுத்திறனாளிகள் பல்வேறு அலுவலகங்களுக்கு சென்றுதான் இச்சான்றிதழ் பெறும் நிலை இருந்தது. அந்தவகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அந்தந்த பகுதிகளிலேயே நடைபெறுகின்ற முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் நேரிடையாக வருகை புரிந்து அவர்களுடைய மாற்றுத்திறன் அளவினை மருத்துவர்களிடம் காண்பித்து அன்றைய நாளிலேயே சான்றிதழ்கள் பெறும் நிலையினை தந்திருக்கிறார்கள்.

இதுவரை நடைபெற்றுள்ள 407 முகாம்கள் மூலம் 26,819 மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் 1.47 கோடி குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர். இருந்தாலும் புதியதாக குடும்பங்கள் இத்திட்டத்தில் பதிவு செய்தவுடன் அவர்களுக்கும் காப்பீடு அட்டைகள் உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இதுவரை நடைபெற்றுள்ள 407 முகாம்களில் 21191 குடும்பத்தினருக்கு மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை 15 முகாம்கள் என்று அறிவிக்கப்பட்டு, கடந்த வாரம் வரை 6வது முகாமாக நடைபெற்றுள்ளது. இதுவரை 14,604 பேர் பயன்பெற்றிருக்கிறார்கள். இன்று 7வது முகாமாக திரும்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பல்வேறு சேவைகளை நேரிடையாக பார்வையிட்டு ஆய்வு செய்திருக்கிறார்கள்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான கேள்விக்கு

முதலமைச்சர் ஒவ்வொரு பருவமழைக்கு முன்பாகவும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள். அந்தவகையில் தான் பருவ மழை காலங்களில் மிகப் பெரிய அளவில் வெள்ளப் பாதிப்புகளோ, நோய் பாதிப்புகளோ இல்லாத நிலை என்பது தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. கடந்த 20 நாட்களுக்கு முன்னாள் சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் முக்கிய சேவை துறைகளுடன் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஒரு கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டு, 10க்கும் மேற்பட்ட துறை செயலாளர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட மாவட்ட உயரலுவலர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அந்தந்த மாவட்டத்தில் எடுக்கப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்தந்த மாவட்டத்தில் பருவமழை தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பார்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழையின்போது மருத்துவ முகாம்கள் 10,000 என்கின்ற வகையில் நடத்தப்பட்டு, ஏதாவது கிராமத்தில் 3க்கும் மேற்பட்ட காய்ச்சல் பாதிப்புகள் இருக்குமேயானால் அங்கு உடனடியாக மழைக்கால சிறப்பு முகாம்கள் நடத்தி ஒரு ஆண்டிற்குள்ளாகவே 27,000க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. இப்போது தான் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. நேற்று வரை 17 செ.மீ அளவிற்கு மழை பெய்திருக்கிறது. பருவமழை கூடுதலாக பெய்யத் தொடங்கியவுடன் எவ்வளவு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்கின்ற தகவல் பத்திரிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தப்படும்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடர்பான கேள்விக்கு

மக்களைத்தேடி மருத்துவம் எனும் திட்டத்திற்கு செப்டம்பர் திங்கள் 25 ஆம் தேதி அமெரிக்கா ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் முதல்முறையாக இந்தியாவில் இருக்கின்ற மாநில அரசின் ஒரு துறைக்கு united Nation intergrency Task Force Award என்கின்ற உலகளாவிய விருது வழங்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவிற்கு கிடைத்திருக்கின்ற பெருமை. மக்களைத் தேடி மருத்துவத்தின் மூலம் இதுவரை பயனடைந்தவர்களின் எண்ணிக்கை 2,48,68,185 பேர், தொடர் சேவை பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 4,68,03,041 பேர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரப்பாக்கம் க.கணபதி, தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல், இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.சோமசுந்தரம், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) டாக்டர் கோ.சாந்தகுமாரி, வளசரவாக்கம் மண்டல குழு தலைவர் ராஜன், சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.கவிதா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாநகராட்சி அலுவலர்கள், மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் உள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.